குஜராத்தில் 597அடி உயரமுள்ள சர்தார் வல்லப் பாய் பட்டேல் உருவச் சிலை

குஜராத்தின் நர்மதை ஆற்றின் நடுவே உருவாக்கப்பட்டுள்ள சர்தார் வல்லப் பாய் பட்டேல் உருவச் சிலை அக்டோபர் 31ஆம் நாள் திறக்கப்பட உள்ள நிலையில் அதன் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குஜராத்தில் நர்மதை ஆற்றில் சர்தார் சரோவர் அணையின் நீர்த்தேக்கத்துக்கு நடுவே தீவுப் பகுதியில் 597அடி உயரமுள்ள வல்லப் பாய் பட்டேல் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

 

ஐயாயிரத்து எழுநூறு டன் உருக்கு, 22ஆயிரத்து ஐந்நூறு டன் வெண்கலத் தகடுகள், 75ஆயிரம் கனமீட்டர் சிமென்ட் காங்கிரீட் ஆகியன இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சிலையின் உட்புறத்திலேயே அருங்காட்சியகம், காட்சி மாடம் ஆகியவை அமைக்கப்படுகின்றன. அடிப்பகுதியில் இருந்து உச்சிக்குச் சென்றுவர லிப்ட் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 31ஆம் நாள் சர்தார் வல்லப் பாய் பட்டேலின் பிறந்த நாளன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தச் சிலையைத் திறந்து வைக்கிறார்.

இதற்காகச் சிலையின் வெளிப்புறத்தில் மெருகூட்டும் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. நாட்டின் முதல் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் இருந்த சர்தார் வல்லப் பாய் பட்டேல் சுதேச அரசுகளை இந்தியாவுடன் இணைக்கப் பாடுபட்டதற்காக இரும்பு மனிதர் என அழைக்கப்படுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *