இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும்பான்மையுடன் பா.ஜ.க. ஆட்சி அமைத்ததே காரணம் – பிரதமர் மோடி

மக்களவையின் கடைசி நாளில் தமது இறுதி உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, மீண்டும் பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சியமைக்கும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. இந்த மக்களவையின் கடைசி நாளில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, கடந்த 5 ஆண்டுகளில் நாடு முன்னேற்றப் பாதையில் சென்றதாகவும், பா.ஜ.க.வுக்கு கிடைத்திருந்த பெரும்பான்மை பலம்தான் இதற்கு காரணம் என்றார்.

கடந்த காலங்களில் பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணிக் கட்சிகளின் இழுப்புக்கெல்லாம் அரசு வளைந்துக் கொடுக்க நேரிட்டதாக குறிப்பிட்ட மோடி, இதன்காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி பின்னடைவை சந்தித்ததாக கூறினார். பாஜக தலைமையிலான பெரும்பான்மை அரசால், உலகின் முன்னேறிய நாடுகளின் பட்டியலில் 6வது நாடாக வளர்ச்சியை நோக்கி இந்தியா திரும்பியிருப்பதாக அவர் கூறினார். வெளிநாடுகளில் இந்தியாவின் மதிப்பு பல மடங்கு அதிகரித்திருப்பதற்கு தாமோ, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜோ காரணமல்ல என்று கூறிய பிரதமர், பெரும்பான்மை அரசுதான் இதற்கு முழுமுதற் காரணம் என்று பிரதமர் தெரிவித்தார்.

பூகம்பத்தைக் கிளப்புவதாக நினைத்து பேசிய ரபேல் குறித்த ராகுலின் குற்றச்சாட்டுகள் எந்த வித அடிப்படையும் இல்லாமல் தட்டையாக விழுந்து விட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். ராகுல்காந்தியின் ஆவேச உரைக்குப் பிறகு, அவர் கண்சிமிட்டியதும் தம்மை தழுவிக் கொண்டதையும் நினைவுகூர்ந்த மோடி இதுபோன்ற ஒரு அனுபவத்தை தாம் முதல்முறையாக காண நேர்ந்ததாக குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *