ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வழிவகுக்காது. அரசு கொள்கை முடிவாக அமைச்சரவை தீர்மாணம் நிறைவேற்ற வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடப்படுவதற்கு இன்று தமிழக அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையின் சார்பில் அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அதிபர் அறிவித்தது போல் தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றம் சென்றால் இந்த அரசாணையை ரத்துச் செய்யும் வாய்ப்பு உள்ளது என மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.

தமிழக அரசின் இந்த ஆணைக்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றங்களை நாடினால் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றித் தருவோம் என வாக்குறுதி அளித்து மீண்டும் நாசகர ஆலையைத் திறக்க வாய்ப்புள்ளது.

எனவே, உடனடியாக தமிழக அமைச்சரவையைக் கூட்டி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கொள்கை முடிவு (Policy Decision) எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

சுற்றுச் சூழலுக்கு விரோதமாகவும், மக்களுக்கு விரோதமாகவும் இருக்கின்ற காரணத்தினால், இந்த ஆலையை அனுமதிக்க முடியாது என்பதை தமிழக அமைச்சரவை கொள்கை முடிவெடுத்து அதனை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அரசு கொள்கை முடிவெடுத்து அறிவித்தால் அந்த முடிவில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. பல்வேறு உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் அரசின் கொள்கை முடிவுகளின் நீதிமன்றங்கள் தலையிடாது என்ற குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே தூத்துக்குடி மக்களின் அரும்பெரும் தியாகம் மதிக்கப்பட வேண்டுமென்றால் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வெறுமனே அரசாணை வெளியீடுவது ஏற்புடையது அல்ல. ஒரு போதும் ஸ்டெர்லைட் ஆலையினால் நீதிமன்றத்தை நாடி மீண்டும் நாசகர ஆலையை திறக்காமல் தடுப்பதற்கு தமிழக அமைச்சரவை உடனே கூடி ஆலையை நிரந்தரமாக மூடுவதை தமிழக அரசின் கொள்கையை அறிவித்து தீர்மானம் நிறைவேற்றி அதனை நடைபெற்று வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலும் சட்டமாக நிறைவேற்ற வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *