ரெய்னா செய்த அந்த உதவி: நெகிழ்கிறார் இங்கிலாந்து பஸ் டிரைவர்!

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா செய்த உதவியை என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாது என்று இங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணியை ஏற்றிச் செல்லும் பஸ்சின் டிரைவர் ஜெஃப் குட்வின் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியினர் செல்லும் பஸ்சின் டிரைவராக இருப்பவர் ஜெஃப் குட்வின். இந்திய அணி எப்போது வந்தாலும் இவரே பஸ் டிரைவராக இருந்துள்ளார். இதனால் அனைத்து வீரர்களுக்கும் இவர் பரிச்சயம். நெருங்கிய தொடர்பும் வைத்துள்ளார். 1999 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் இருந்தே பல்வேறு அணிகளை அழைத்துச் செல்லும் பஸ் டிரைவராக இவர் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் அவரது பேட்டியை இந்திய கிரிக்கெட் வாரியம் தனது வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணி ஒழுங்கமானது என்று புகழ்ந்துள்ளார்.

அவர் கூறும்போது, ’சச்சின் டெண்டுல்கர் எப்போதும் எனக்கு வலதுபக்கத்தில்தான் அமர்வார். விராத் கோலி, முன்பக்கம் உட்கார்வார். மற்ற அணிகளை விட இந்திய கிரிக்கெட் அணி, ஒழுக்கமானது. போட்டி முடிந்ததுமே பஸ்சுக்கு வந்துவிடுவார்கள். ஆனால், ஆஸ்திரேலிய அணி வீரர்கள் நள்ளிரவு இரண்டு மணிக்கு மேல்தான் டிரெஸ்சிங் ரூமில் இருந்தே கிளம்புவார்கள். அதுவரை குடித்துக்கொண்டே இருப்பார்கள். இப்போது அப்படியில்லை.

சுரேஷ் ரெய்னா செய்த உதவியை என்னால் மறக்க முடியாது. எனது மனைவி உடல் நலமில்லாமல் இருந்தார். பணம் இல்லாமல் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தேன். இதைக் கேள்விபட்டு தனது ஜெர்சியை ஏலத்தில் விட்டு அந்தப் பணத்தை எனக்குக் கொடுத்தார் அவர். இதை என்னால் எப்போதும் மறக்க முடியாது. தோனி, சிறந்த விக்கெட் கீப்பர்தான். சேஹல் என்னை, ‘ஓல்டு மேன்’ என்று அழைகிறார்’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *