ரபேல் போர் விமான ஒப்பந்தத்தின் சிறப்புகள்…

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தால் இந்தியாவிற்கு என்ன நன்மை, அந்த விமானத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…

பிரான்சிடம் இருந்து இந்திய அரசு ரபேல் ரக போர் விமானங்களை வாங்க உள்ளது. 2016-ஆம் ஆண்டு கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் படி 63 ஆயிரத்து 460 கோடி ரூபாய் செலவில் 36 விமானங்களை இந்தியா கொள்முதல் செய்ய உள்ளது. 18 மாதங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின் இந்தியாவின் வலியுறுத்தலை அடுத்து 2624 கோடி ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

முதல் விமானத்தை 36 மாதங்களுக்குள்ளும் அனைத்து விமானங்களையும் 67 மாதங்களுக்குள் தயாரித்து ஒப்படைத்து விட வேண்டும் என்பது ஒப்பந்தமாகும். ஒற்றை இருக்கை கொண்ட 28 விமானங்களும், 2 இருக்கைகள் கொண்ட 8 விமானங்களும் வாங்கப்படுகின்றன. இதற்காக முதலில் 15 சதவீத தொகையை முன்பணமாக இந்தியா வழங்குகிறது. 2017 ஆம் ஆண்டு நவம்பர் முதல் ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் மத்திய அரசு அதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

இந்திய விமானப்படையில் அதி திறன் மிக்க போர் விமானமாக ரபேல் இணையவுள்ளது. இலக்குகளை குறிவைத்து வீரர்கள் துல்லியமாக, விரைவாகவும் ஆயுதங்களை பயன்படுத்த முடியும். கடும் குளிர் பிரதேசமான காஷ்மீரின் லே போன்ற மலை உச்சியில் அமைந்துள்ள விமான தளத்தில் இருந்தும் விமானத்தை உடனடியாக இயக்க முடியும்.

எதிரிகளை அடையாளம் காண்பதற்கான ரேடார் எச்சரிக்கை கருவியும் இதில் உள்ளது. விமானத்தை நோக்கி ஏவப்படும் ஏவுகணைகளை தடுத்து அழிக்கும் அமைப்பு இருப்பதும் ரபேலின் சிறப்பம்சங்களாகும்.

ஆயுதங்கள், பயிற்சிக்கான கட்டணம் இன்றி ஒரு இருக்கை கொண்ட ஒரு ரபேல் விமானத்தின் விலை 731 கோடி ரூபாயாகும். 300 கிலோ மீட்டர் தொலைவு வரை தரையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்ட ஸ்கேல்ப் ஏவுகணைகள். எதிரி விமானத்தை 100 கிலோ மீட்டர் தொலைவிலும் தாக்கும் சக்தி படைத்த வான் தாக்குதலுக்கு ஏற்ற மெடேயர் ஏவுகணைகளும் இந்த விமானத்தில் பயன்படுத்தப்பட உள்ளன.

ரஃபேல் விமானமானது தற்போது இந்திய விமானப்படையில் உள்ள திறன்மிக்கதாக கருதப்படும் சுகோய் (( SU 30MKI-)) விமானத்தைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு வலிமை வாய்ந்தது. ரஃபேல் ஒருமுறை பறக்கும் தூரம் 780 முதல் 1055 கிலோ மீட்டர் ஆகும். 24 மணி நேரத்தில் 5 முறை ரபேல் மூலம் தாக்குதல் நடத்த முடியும். சுகோயில் மூன்று முறை மட்டுமே தாக்குதல் நடத்த முடியும். ரபேல் போர் விமானங்களுக்கு 50 ஆண்டுகளுக்கு தேவையான பிரான்ஸ் தொழில்துறை ஆதரவும் கிடைக்கிறது.

ரபேல் போர் விமான உற்பத்தி பணியில் 50 சதவீதம் மேக் இன் இந்தியா அல்லது தொழில்நுட்பம் பகிர்தல் திட்டத்தின் கீழ் 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வேலைகள் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபென்ஸ் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களுக்கு கிடைக்கும். இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெருகும் என பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *