மும்பையில் புல்லட் ரயில் திட்டத்தை தொடங்கவிட மாட்டோம் ; மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே எச்சரிக்கை

ரயில்வே உட்கட்டமைப்புக்களை மேம்படுத்தாமல், மும்பையில் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என்று ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மஹாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே, மும்பைக்கு குடியேற வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும்வரை, கூட்ட நெரிசல்கள் ஏற்படும் என கூறியுள்ளார். எல்ஃபின்ஸ்டோன் ரயில் நிலைய நடைமேம்பாலத்தில் கூட்ட நெரிசலால் 23 பேர் உயிரிழந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், ரயில்வே உட்கட்டமைப்புக்களை மேம்படுத்த ஒருலட்சம் கோடி செலவிடப்படவேண்டும் என்ற கடோத்கர் குழு அறிக்கையின் பரிந்துரை செயல்படுத்தப்படவில்லை என குற்றம்சாட்டினார். ஆனால், அதே திட்ட மதிப்பில் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் ராஜ்தாக்கரே குறிப்பிட்டார். ஆனால், ரயில்வே உட்கட்டமைப்பை மேம்படுத்தாமல் புல்லட் ரயில் திட்டத்துக்கு ஒரு செங்கல்லைகூட பதிக்க அனுமதிக்கமாட்டோம் என்றும் ராஜ்தாக்கரே எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், மும்பையில் ரயில்வே உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், ரயில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்வதில் செலவழிக்கப்படும் நிதியில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை என்று தெரிவித்தார். மேலும், அடுத்த 15 மாதத்திற்குள் மும்பை புறநகர் ரயில்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்றும் படிப்படியாக நாடு முழுவதும் சிசிடிவி கேமரா அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *