முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் மனு மீது விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் மனு மீது விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

உலக வங்கி மேற்பார்வையில் நடைபெறும் ஒட்டன்சத்திரம் – தாராபுரம் – அவினாசிபாளையம் 4 வழிச்சாலைத் திட்டம் உள்ளிட்ட நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கான டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, புகாரளிக்கப்பட்ட தேதி முதல் தினசரி நடந்த விசாரணையின் விவரங்கள் குறித்த அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்தது. மனுதாரர் தரப்பு கூறுவது போல் டெண்டர் பெற்றவர்களுக்கு எதிராக கிரிமினல் பிரிவில் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், உரிமையியல் வழக்குகளின் கீழ்தான் விசாரிக்க வாய்ப்புள்ளதாகவும் அரசு தரப்ப வழக்கறிஞர் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் உரிமையியல் வழக்கில் விசாரணை என்பதை குற்றத்தின் ஒப்புதலாகவே கருத வேண்டும் என்றார். இதனை மறுத்த அரசு தரப்பு வழக்கறிஞர், கருத்தைத் திரித்துக் கொள்ளக் கூடாது என்றும், சிவில் வழக்கில் வரலாம் என்றே சொல்லப்பட்டதே தவிர வரும் என எடுத்துக் கொள்ளக் கூடாது என்றார்.

இதையடுத்து, சிங்கிள் டெண்டர் குறித்த நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் கடந்த 20 ஆண்டுகளாக அனைத்து ஆட்சியிலும் 281 ஒப்பந்தங்கள் சிங்கிள் டெண்டராக ஒதுக்கப்பட்டதாகவும், சிங்கிள் டெண்டர் என்பதால் தவறு நடந்திருக்கும் என மனுதாரர் தரப்பு கூறுவது ஏற்கத்தக்கதல்ல என்று விளக்கமளித்தார்.

இதையடுத்து டெண்டர் அழைப்பு விடுத்தது எப்போது? ஒப்புதலுக்கான 3 கமிட்டிகள் அமைத்தது யார்?, கமிட்டியில் அளிக்கப்பட்ட ஆவண விவரங்கள் என்னென்ன? உள்ளிட்டவற்றை வரும் திங்களன்று தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *