மாணவி பிரதிபா தற்கொலை! இந்தியா முழுவதும் நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மருத்துவக் கனவு ஈடேறாத துக்கத்தில் மாணவி பிரதிபா விசம் குடித்துத் தற்கொலை செய்துள்ளார். நீட் தேர்வால் தமிழகத்தில் அனிதாவின் உயிர் காவுகொள்ளப்பட்டது. இப்போது பிரதிபாவை அது பலி வாங்கியிருக்கிறது. கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைக் கருக்கிவிட்ட நீட் தேர்வு இந்தியா முழுவதும் ஒழிக்கப்படவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அருகில் உள்ள பெருவளூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஏழைக்குடும்பம் ஒன்றில் பிறந்த பிரதிபா பத்தாம் வகுப்பில் 490 மதிப்பெண்களும் பன்னிரெண்டாம் வகுப்பில் 1125 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சியடைந்தார். பழைய முறைப்படி மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை நடைபெற்றிருந்தால் தகுதியின் அடிப்படையில் எளிதாக அவருக்கு இடம் கிடைத்திருக்கும். நீட் தேர்வுதான் அவரது உயிரைக் காவு கொண்டிருக்கிறது.
தமிழ் வழியில் தேர்வு எழுதலாம் என்று கூறியதன் அடிப்படையில் பிரதிபா தமிழ் வழியில் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் 49 வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டு 150க்கும் அதிகமான மதிப்பெண்கள் அதனால் பாதிக்கப்பட்டுள்ளன. அது இந்த தேர்வை நடத்திய சிபிஎஸ்இ நிறுவனத்தின் தவறாகும். அதை சரி செய்யும் வரை தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. அது விசாரணைக்கு வருவதற்கு முன்பே அவசர அவரசரமாக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்டன. இது தமிழ் வழியில்  தேர்வு எழுதிய மாணவர்களுக்கு எதிரான திட்டமிட்ட சதியாகும் இதற்கு சிபிஎஸ்இ நிறுவனமும் மத்திய அரசும் தான் பொறுப்பு.

மருத்துவக் கல்வியில் நாட்டிலேயே முதலிடத்தில் இருந்த தமிழ்நாடு நீட் தேர்வின் காரணமாகக் கடைசிக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதைப்பற்றி தமிழக அரசு எந்த அக்கறையும் இல்லாமல் மத்திய அரசின் சதிக்குத் துணை போகிறது.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி நீட் நுழைவுத் தேர்வு முறையை இந்தியா முழுவதற்குமே ரத்து செய்ய வேண்டும். மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்  பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இவண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *