போக்குவரத்து, மின்துறை, கூட்டுறவு வீட்டுவசதி சங்க ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் ; மொத்தம் 489 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்….

தமிழக அரசின் பொதுத்துறை, கூட்டுறவுத்துறை, மின்வாரியம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், லாபம் ஈட்டியுள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். நட்டம் அடைந்துள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பிற கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கும் 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத்தோட்ட கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு, அந்த நிறுவனங்களின் இலாப நட்டத்திற்கு ஏற்ப போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகையோ அல்லது 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகையோ வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரிபவர்களுக்கு 20 விழுக்காட்டிற்கு மிகாமல் போனஸ் வழங்கப்படும். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 4,000 ரூபாயும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாயும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2,400 ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்த பட்சம் எட்டாயிரத்து 400 ரூபாயும் அதிகபட்சம் 16 ஆயிரத்து 800 ரூபாயும் பெறுவார்கள் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், 3 லட்சத்து 69 ஆயிரத்து 610 தொழிலாளர்களுக்கு 489 கோடியே 26 லட்சம் ரூபாய் போனஸாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *