பெட்ரோல், டீசலை ₹35-க்கு விற்க தயார் – பாபா ராம்தேவ் அதிரடி

மத்திய அரசு அனுமதித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலை ரூ. 35-க்கு விற்க தயாராக இருப்பதாக யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

 

தனியார் தொலைக்காட்சி சார்பில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பாபா ராம்தேவ் பங்கேற்றார். அப்போது, அவர் கூறியதாவது:

“கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு கோரி பிரசாரம் செய்தேன். ஆனால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பாஜகவுக்காக பிரசாரம் செய்யப் போவதில்லை.

நான் அரசியலில் இருந்து விலகிவிட்டேன். அதேசமயம் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறேன். தற்போது, நான் சுதந்திரமான மனிதன்.

மத்திய அரசு குறித்து விமர்சிப்பது அவரவர் தனிப்பட்ட உரிமை. அதேசமயம், மோடி அரசு செயல்படுத்திய தூய்மை இந்தியா போன்ற திட்டங்களை பாராட்டாமல் இருக்க முடியாது.

அதிகரித்துவரும் விலைவாசி உயர்வு இந்த அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விற்பனையை சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பின் (ஜிஎஸ்டி) கீழ் கொண்டு வரவேண்டும்.

வரிவிதிப்பில் சில சலுகைகளை அளிப்பதுடன், இவற்றை விற்பனை செய்வதற்கான அனுமதியையும் அளித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலை ரூ. 35 – 40க்கு என்னால் வழங்க முடியும்.

வருவாய் இழப்பு ஏற்பட்டால், நாட்டின் செயல்பாடு முடங்கிவிடாது. இதற்கு மாற்றாக பெரும் செல்வந்தர்களிடம் கூடுதலாக வரிகளை விதிக்கலாம்”

இவ்வாறு பாபா ராம்தேவ் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *