பூரண மதுவிலக்கை அமுல் படுத்தாத தமிழக அரசு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டணம்

பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரி தமிழக மக்கள் நீண்ட நாட்களாக பல கட்ட போராட்டங்களை அரசிற்கெதிராக நடத்தியும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இக்கோரிக்கை இருந்து வருகிறது.

 

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், கே.ரெட்டியபட்டியில் வசித்து வந்த மாடசாமி மகன் தினேஷ் 18. நன்கு படித்துவந்தவர் ; தற்போது
பிளஸ் டூ தேர்வு எழுதியுள்ளார் . தந்தையின் குடிப்பழக்கத்தால் நிம்மதி இழந்து தவித்து வந்த தினேஷ் பல முறை மன்றாடியும் மாடசாமி குடியைவிட தயாராக இல்லை .

கடும் மனவுளைச்சலுக்கு உள்ளான தினேஷ் மதுக்கடைகளை மூடக்கோரி தமிழக முதல்வர் மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தமிழக மக்களை துயரத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை ஒருபோதும்
தீர்வாகாது என்றபோதும் நிம்மதியில்லாமல் வாழ்வதைவிட சாவதே மேல் என்ற தவறான முடிவை நோக்கி தள்ளும் அளவிற்கு மதுவின் கொடூரம் இருந்துள்ளது என்பதை அறியமுடிகிறது.

 

இதே நிலையில்தான் தமிழகத்தில்
இலட்சக்கணக்கான மக்கள் மதுவிற்கு அடிமையாகி நோயினாலும், வறுமையாலும், குடும்ப அமைதி இழந்து தினம் தினம் செத்து மடிகின்றனர்.
மக்களின் நலன்காக்கத்தான் அரசு, ஆட்சி,அதிகாரம் அனைத்தும் என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்

“மக்களால் நான் மக்களுக்காக நான்” என்று மேடைகளில் முழங்கி
படிப்படியாக பூரண மதுவிலக்கை அமுல் படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்துதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி அமைத்தார்.

அம்மாவின் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என்று சூழுரைக்கும் எடப்பாடி அரசு
பூரண மதுவிலக்கை கொண்டுவராமல் ஒவ்வொரு நாளும் செத்து மடியும் தினேஷ்களை வேடிக்கை பார்த்து வருவதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *