பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ்குமாரால் திறக்கப்படவிருந்த அணையின் ஒரு பகுதி, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பகல்பூர் என்ற இடத்தில் 389 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணை ஒன்று கட்டப்பட்டது. இதனை அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் நேற்று திறந்துவைக்க இருந்தார். இதனிடையே, அணை திறக்கப்படும் முன்னரே நேற்றுமுன்தினம் ஏற்பட்ட வெள்ளத்தில், அணை அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியை சுற்றிலும் வெள்ள நீர் ஆறாக ஓடியது. அணை உடைப்பால் மேலும் பாதிப்பு வராமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இந்நிலையில், அணை உடைந்ததற்கு வெள்ளம் முழு வேகத்தில் வந்ததே காரணம் என அம்மாநில நீர் வளத்துறை அமைச்சர் லல்லன் சிங் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் நிதிஷ்குமாரின் மோசமான ஊழல் ஆட்சி நிர்வாகமே காரணம் என பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். அணை அடித்துச் செல்லப்பட்டதையடுத்து, பகல்பூர் செல்லவிருந்த முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *