பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இடையே சீனா, ரஷ்ய அதிபர்களை சந்தித்தார் பிரதமர் நரேந்திரமோடி

தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இடையே சீன அதிபர் சி-ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிரிக்ஸ் நாடுகளின் பத்தாவது உச்சிமாநாடு ஜோகனஸ்பர்க்கில் நடைபெறுகிறது. நேற்று இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். மாநாட்டின் இடையே அவர் சீன அதிபர் சி-ஜின்பிங்கை சந்தித்தார். இரு தலைவர்களும் இந்தியா-சீனா நட்புறவை வலுப்படுத்தும் வகையில் வர்த்தகம், பாதுகாப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

சீனாவுக்கு அமெரிக்கா வர்த்தக ரீதியான முட்டுக்கட்டைகள் போட்டு சீனப்பொருட்களுக்கு கூடுதலாக வரிவிதிக்கும் விவகாரம் உள்ளிட்ட முக்கிய சர்வதேச பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தாக கூறப்படுகிறது. கடந்த நான்கு மாதங்களில் மூன்றாவது முறையாக மோடி சீன அதிபருடன் பேச்சு நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அர்ஜண்டினா அதிபர் மவுரிசியோ மாக்ரி பிரதமர் மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்

முன்னதாக பிரிக்ஸ் மாநாட்டில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, சர்வதேச வர்த்தகம் போன்றவற்றுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று உறுதியளித்தார். தொழில்நுட்பம், திறன் மேம்பாடு போன்றவற்றாலும் பரஸ்பர ஒத்துழைப்பாலும் நாம் வாழும் உலகை இன்னும் மேம்பட்ட உலகமாக மாற்ற முடியும் என்று மோடி தமது உரையில் குறிப்பிட்டார்.நமது பாடப்புத்தகங்களிலும் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்த வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார்.

மாநாட்டின் போது ரஷ்ய அதிபர் புதின், பிரேசில் அதிபர் மிக்கெல் டெமர், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராம்போசா உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். தீவிரவாதத்தை ஒன்றிணைந்து எதிர்க்க பிரிக்ஸ் நாட்டு தலைவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *