பா.ஜ.க. ஆட்சியில் அந்நிய முதலீடு அதிகரித்ததாக பிரதமர் மோடி தகவல்…

அந்நிய முதலீடுகள் அதிகரித்து நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு முன்னேற்றி வருவதாகவும், தமது அரசின் வெளியுறவுக் கொள்கையால் வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, உலகப் பொருளாதார அமைப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுடனான நல்லுறவு காரணமாக, இந்தியாவுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 200 பில்லியன் டாலர் அந்நிய முதலீடுகள் கிடைத்திருப்பதாக குறிப்பிட்டார். இதன்காரணமாக பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் மோடி விளக்கம் அளித்துள்ளார்.

மேக் இன் இந்தியா,இந்தியத் திறன் மேம்பாடு, டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் நகரங்கள் போன்ற பல்வேறு திட்டங்களால் நாட்டின் வலுவான பொருளாதார அடித்தளம் கட்டமைக்கப்பட்டு வருவதாகவும், 2022ம் ஆண்டுக்குள் இத்திட்டங்களால் புதிய இந்தியா உருவாகும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், வங்கிகள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டு வாராக்கடன்களாக அவை பெருகியிருப்பதாக கூறிய மோடி, இது மக்களின் கண்களுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டு கிடந்ததாகவும் குறிப்பிட்டார். தமது அரசின் உறுதியான நடவடிக்கைகளால் இந்த மோசடிகள் அம்பலத்துக்கு வந்துள்ளதாகவும், வாராக் கடன்களை மீட்க சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.

அமெரிக்காவுடனும் ரஷ்யாவுடனும் இந்தியா ஒரே நேரத்தில் நட்பாக இருக்க முடிகிறது என்றும், சீனாவுடனும் நல்லுறவு நீடிப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். ஷாங்காய் உச்சி மாநாட்டில் இந்தியாவின் பொருளாதார வெற்றியை உலக நாடுகள் போற்றியதையும் மோடி சுட்டிக்காட்டினார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் நல்லுறவு நீடிப்பதாகவும், வரும் காலங்களில் இந்தியா-அமெரிக்கா உறவுகள் புதிய ஒத்துழைப்பை நோக்கி செல்லும் என்றும் மோடி கூறினார்.

பாகிஸ்தானில் இம்ரான்கானின் தலைமையில் புதிய அரசு பதவியேற்க உள்ள நிலையில் ஜனநாயகம் ஆழமாக வேரூன்றும் என்று நம்பிக்கைத் தெரிவித்த பிரதமர் மோடி, தீவிரவாதம், வன்முறையற்ற பிரதேசமாக தெற்காசிய மண்டலத்தை மாற்ற பாகிஸ்தான் அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *