பாஜக – காங்கிரஸ் அல்லாத கூட்டாட்சியை மத்தியில் அமைப்போம் – சந்திப்புக்குப் பின் மம்தா பானர்ஜி – சந்திர சேகர ராவ் பேட்டி

பாஜக – காங்கிரஸ் அல்லாத கூட்டாட்சியை மத்தியில் உருவாக்குவதே தங்களது நோக்கம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜியும், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவும் தெரிவித்துள்ளனர்.

பாஜக – காங்கிரஸ் அல்லாத புதிய கூட்டணியை உருவாக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜியின் முயற்சிக்கு, தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் அண்மையில் ஆதரவு தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக, கொல்கத்தா சென்று மம்தா பாணர்ஜியை சந்திர சேகர ராவ் சந்தித்துப் பேசினார். ஒரு மணி நேர சந்திப்புக்குப் பின்னர் இரண்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது, மத்தியில் கூட்டாட்சியை அமைப்பதற்கான புதிய அணியை உருவாக்கும் முயற்சிக்கு, இந்த சந்திப்பு நல்ல தொடக்கமாக அமைந்திருப்பதாக மம்தா பானர்ஜி கூறினார். அரசியலில், மாற்றத்திற்கான தொடர் செயல்பாடுகள் தவிர்க்க முடியாதவை எனத் தெரிவித்த மம்தா, மத்தியில் ஒரு கட்சி மட்டுமே ஆட்சி நடத்தும் நிலை இனியும் தொடரக் கூடாது எனக் கூறினார்.

2019 மக்களவைத் தேர்தலின் போது, பாஜக – காங்கிரஸ் அல்லாத மற்றொரு அணி களத்தில் இருக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாக கூறிய சந்திர சேகர ராவ், 71 ஆண்டுகளாக எந்த பயனையும் தராத தற்போதைய அரசியலில் மாற்றம் ஏற்பட வேண்டும் என அவர்கள் கருதுவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *