நீட் கொடூரத்திற்கு மாணவி பிரதீபா பலி! மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு! – கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி அறிக்கை

 

மத்திய மாநில அரசுகளின் நீட் கொடூரத்தால் கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் சோகச் சுவடுகள் மறையும் முன்னரே, ப்ளஸ்-2 தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் திருவண்ணாமலை மாவட்டம் பெரவலூர் கிராமத்தை சேர்ந்த ஏழை மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

தற்கொலை செய்துகொண்ட பட்டியலின மாணவியான பிரதீபா ப்ளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெற்றிருந்தால் நிச்சயம் அவர் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம்பெற்று தனது மருத்துவர் கனவை அடைந்திருப்பார். ஆனால், மருத்துவக் கல்வி சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கியதன் காரணமாக கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 155 மதிப்பெண் பெற்று தனியார் கல்லூரியில் சேரும் வாய்ப்பை பெற்றார். ஆனால், ஏழை மாணவியான அவர் அரசு மருத்துவக் கல்லூரியில் மட்டுமே சேர்ந்து படிக்கும் பொருளாதார சூழலில் இருந்ததால் மீண்டும் இந்த ஆண்டு தேர்வெழுதினார். ஆனால், இந்த ஆண்டு 39 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியுள்ளார். இந்த தோல்வி காரணமாக ஏற்பட்ட விரக்தியில் பிரதீபா தற்கொலை முடிவை எடுத்துள்ளார். இது மத்திய, மாநில அரசுகளின் நீட் பயங்கரவாதத்தால் ஏற்பட்ட இழப்பாகும். மத்திய, மாநில அரசுகளே இதற்கு பொறுப்பெற்க வேண்டும்.

நீட் தேர்வின் நீட்சி என்பது தமிழகத்தில் இருந்து மருத்துவராக வேண்டும் என்ற ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளின் கனவைச் சிதைத்துள்ளதோடு, எதிர்காலத்தில் தமிழகத்தில் மருத்துவ வல்லுநர்களே இல்லாத ஒரு சூழலை உருவாக்கிவிடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. சுகாதாரத்தில் முன்னேறிய தமிழகத்தின் சுகாதாரத்துறையை தகர்க்கவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதோ என்றெண்ணம் ஏற்படுகிறது.

இந்த ஆண்டு தமிழகத்தில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 602 பேர் நீட் தேர்வினை எதிர்கொண்ட நிலையில், வெறும் 40 சதவீதம் மட்டுமே அதாவது, 45, 336 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதப்படி தமிழகம் கடைசிக்கு முந்தையை நிலையில் இடம்பெற்றுள்ளது. கல்வியில் மற்ற மாநிலங்களை விட முன்னேறிய மாநிலமாக பல்வேறு ஆய்வுகள் மற்றும் தரவரிசைப் பட்டியலில் முன்னணியில் விளங்கும் தமிழகம் நீட் தேர்வில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

மேலும், நீட் தேர்வுக்கு என்று தனியாக சில லட்சங்கள் ரூபாய் செலவு செய்து ‘கோச்சிங்’ சென்றால் தான் அதனை எதிர்கொண்டு ஓரளவு வெற்றிபெற முடியும் என்பது தேர்வு முடிவுகள் மூலம் வெளிப்பட்டுள்ளது. மாறாக அரசு நடத்தும் பெயரளவிலான கோச்சிங் சென்டர்களால் எந்த பலனையும் அரசுப் பள்ளி மாணவர்கள் அடையவில்லை என்பதையும் தேர்வு முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. தேர்வெழுதிய அரசுப் பள்ளி மாணவர்களில் வெறும் 1.8 சதவிகித மாணவர்கள் அதாவது 460 பேர் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதன் விபரீதத்தை புரிந்துகொள்ளாத தமிழக அரசு கடந்த ஆண்டை விட நீட் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாக வீண் பெருமை பேசுகிறது.

பள்ளிக் கல்வியில் ஏழை-எளிய மாணவர்கள் சாதனை வெற்றி அடைந்தாலும், அவர்கள் லட்சங்கள் செலவு செய்து நீட் தேர்வை எதிர்கொண்டால் மட்டுமே வெற்றிபெற முடியும். அதன் மூலமே மருத்துக் கல்வியை கற்க முடியும் என்பது ஒருவித கல்வித் தீண்டாமையாகும். இதன்மூலம் அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை-எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு இனி கானல் நீராகிப் போவதோடு, மருத்துவத்துறையானது சேவை துறையிலிருந்து வணிக துறையாக மாறிப்போகும் சூழல் உருவாகும். அதோடு தமிழகத்தின் ஒட்டுமொத்த சுகாதாரமும் சீர்கெட்டுவிடும். இந்த அவல நிலைக்கு தமிழக அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.

தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள இத்தகைய அவலநிலைக்கு, மத்திய அரசின் நீட் தேர்வு செயல் திட்டத்தை தமிழக அரசு வலுவாக எதிர்த்து களமாடாததும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.

நீட் தேர்வு முறையானது சமூக நீதிக்கு எதிரானது என தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வரும் நிலையில், ஏழை எளிய மாணவர்களின் நலனில் அக்கறையில்லாத மத்திய பாஜக அரசு அதனை விடாப்பிடியாக நடத்தி வருகின்றது. நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் கோரிவரும் நிலையில் அந்த கோரிக்கையை கிஞ்சிற்றும் மதிக்காத மத்திய அரசு, தமிழகத்தின் தனது கைப்பாவையான அரசு மூலம் எதிர்ப்புகளை புறக்கணித்து நீட் தேர்வை நடத்தி வருகின்றது.

நீட் தேர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானம் மீது குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற தமிழக அரசு தொடர் முயற்சிகளை மேற்கொள்வதாக தெரியவில்லை. நீட்டை திணிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துப்போகும் அனைத்து வேலைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது. இது கண்டிக்கத்தக்கது.

ஆகவே, ஏழை-எளிய மாணவர்களை கருத்தில் கொண்டும், நீட்டால் பாழாகப்போகும் மேம்பட்ட தமிழக சுகாதாரத்தின் நிலையையும் கவனத்தில் கொண்டு, நீட் விலக்கு பெற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *