நவோதயா பள்ளிகள் போல், தமிழகத்தில் அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை…

நவோதயா பள்ளிகளின் தரம் போல், அனைத்து பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

நீட் எனும் சமூக அநீதிக்கு பலியான அனிதாவிற்கு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது. திராவிடர் மாணவர் கழகம் சார்பிலும், திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமையிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் மு. வீரபாண்டியன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் உ. தனியரசு, மாணவி அனிதாவின் தந்தை சண்முகம், சகோதரர் ச.ஆ. மணிரத்தினம் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாணவி அனிதாவின் திருவுருவ படத்தை திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். பின்னர், அனிதாவுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், நவோதயா பள்ளிகளின் தரம் போல், அனைத்து பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவி செய்கின்ற அரசு என குற்றம்சாட்டிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, பேசிய திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், மாணவி அனிதாவின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம் என்பதில் மாற்று கருத்து இல்லை என கூறினார். மேலும், தமிழகத்தில் மக்கள் விரும்ப கூடிய ஆட்சி விரைவில் வரும் என மு.க. ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *