நமது நாட்டின் மண், நீர், காற்று ஆகியவற்றின் தூய்மை பாதுகாக்கப்பட இறைவனிடம் பிரார்த்திப்போமாக! – எம்.எச்.ஜவாஹிருல்லா

ஈதுல் பித்ரு என்னும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.ஈதுல் பித்ரு என்னும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஏக இறைவனின் ஆணையை நடைமுறைப்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள் ஒரு மாதம் முழுவதும் பகலெல்லாம் நோன்பிருந்து, இரவெல்லாம் விழித்திருந்து வணங்கி, ஏழை எளிய மக்களுக்கு தான தர்மங்களை வழங்கி அதன் இறுதியில் கொண்டாடப்படும் திருநாளே தமிழகத்தில் பரவலாக ரம்ஜான் என்றழைக்கப்படும் ஈகைத் திருநாள்.
சுயக் கட்டுப்பாட்டை மக்களுக்கு பயிற்றுவிக்கும் மாதமாக ரமலான் மாதம் விளங்குகிறது. இறைவனுக்காக நோன்பிருக்கும் முஸ்லிம்கள் எத்தகைய தாகமோ பசியோ எடுத்தாலும் நோன்பை முறிக்கும் வகையில் எதையும் உண்பதும் இல்லை பருகுவதும் இல்லை.
உலக மக்களுக்கு தெளிவான வழிகாட்டியாக அருளப்பட்ட திருக்குர்ஆன் அருளப்பட்ட ரமலான் மாதத்தின் ஒரு இரவை ஆயிரம் மாதங்களை விட சிறப்பான இரவு என்று இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான். இந்த இறைவாக்கின் அடிப்படையில் தூக்கத்தைத் துறந்து இரவெல்லாம் நின்று வணங்குவதற்கு ரமலானில் முஸ்லிம்கள் சிரமப்படுவதில்லை. தனது உழைப்பில் ஈட்டிய வருமானமாக இருந்தாலும் இறைவனின் கட்டளைப்படி ஏழை எளியோருக்கு தம் செல்வத்தை வாரி வழங்குவதில் கஞ்சத்தனம் காட்டுவதில்லை.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் ரமலான் மாதம் முஸ்லிம்களுக்கிடையே சுயக் கட்டுப்பாட்டிற்கான ஒரு தீர்க்கமான பயிற்சிக் களமாக அமைந்துள்ளது. ரமலானில் வளர்த்துக் கொண்ட இந்த சுயக் கட்டுப்பாடு என்னும் சீரிய பண்பு இனிவரும் மாதங்களிலும் நமது செயல்பாடுகளில் மேலோங்கியிருக்க இப்பெருநாளில் நாம் உறுதி எடுத்துக் கொள்வோமாக.
நாம் வாழும் இவ்வுலகம் இறைவன் நமக்கு அருளிய மாபெரும் அருட்கொடையாகும். இந்த உலகில் உள்ள சூழலை மாசுப்படுத்தி அதனை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் பல்வேறு வடிவங்களில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் நமது பூவுலகின் இயற்கைத் தன்மையைப் பாதுகாத்து எதிர்கால சந்ததிகளுக்கு பக்குவமாக வழங்குவது நமது தார்மீகக் கடமையாகும். ‘பாதையோரங்களிலும், நிழல் தரும் இடங்களிலும் மல சலம் கழித்து மக்களின் சாபத்தைப் பெறுவது குறித்து நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள்’ என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
சுற்றுச் சூழலைத் தூய்மையாக வைத்துக் கொள்வதின் அவசியத்தை இந்த நபிமொழி எடுத்துச் சொல்கிறது. சுற்றுச்சூழலைப் பாழ்படுத்தும் அனைத்து வகையான நடவடிக்கைகளையும் தவிர்த்துக் கொள்ளும் மனக்கட்டுப்பாட்டுடன் நடப்பதற்கு நாம் இப்பெருநாளில் உறுதி எடுத்துக் கொள்வோமாக.
நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள்: ‘முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து, விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். (புகாரி: 2320)
மரம் வளர்த்தலின் அவசியத்தை இந்த நபிமொழி வலியுறுத்துகிறது. மேலும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் இறைவனின் அருளைப் பெறுபவை என்பதையும் இந்த நபிமொழி சுட்டிக்காட்டுகின்றது.
நாம் வாழும் பூவுலகு அனைவருக்கும் ஆரோக்கியத்தை தரும் நிலையில் தூய்மையாக விளங்குவதற்கு நம்மாலான முயற்சிகளை மேற்கொள்ள இத்திருநாளில் நாம் உறுதி எடுத்துக் கொள்வோமாக.
ரமலான் மாதத்தில் நாம் செய்த நற்செயல்களுக்கு இறைவன் நமக்கு கூலி தரும் திருநாளே ஈகைத் திருநாளாகும். இந்த நாளில் உலகம் முழுவதும் சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து நீங்குவதற்கும், சுற்றுச்சூழல் சீர்கேட்டினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிணிகள் நீங்குவதற்கும், நமது நாட்டின் மண், நீர், காற்று ஆகியவற்றின் தூய்மை பாதுகாக்கப்படவும், நமது நாட்டில் வாழும் அனைத்து மக்களிடையேயும் நல்லிணக்கமும், அன்பும், பரிவும் பாசமும் பெருகி வளப்படுவதற்கும் இந்த நந்நாளில் இறைவனிடம் இருகரமேந்தி பிரார்த்திப்போமாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *