தொடர் விடுமுறையை முன்னிட்டு 770 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு நேற்று மட்டும் கூடுதலாக 770 பேருந்துகள் இயக்கப்பட்டன. கொட்டும் மழையிலும் சொந்த ஊர் செல்வதற்காக கோயம்பேட்டில் பொதுமக்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழகத்தில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை என தொடர்ந்து அடுத்த 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் உள்ளவர்கள் சொந்த ஊர் செல்வதற்காக போக்குவரத்து துறை சார்பில் சுமார் 2, 700 விரைவுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பேருந்துகளுக்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் 90 விழுக்காடு வரை முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டது. இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிமாக காணப்பட்டது. பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேட்டில் இருந்து மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு கூடுதலாக 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

 சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல தனியார் ஏ.சி., ஸ்லீப்பர் பேருந்துகளில் 1,800 முதல் 2000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், அரசின் எஸ்.இ.டி.சி. மற்றும் ஏ.சி., படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் 975 ரூபாய் கட்டணமே வசூலிக்கப்பட்டது. கட்டணத் தொகை குறைவு காரணமாக அரசுப் பேருந்துகளில் பொதுமக்கள் கூடுதலாக பயணித்தனர். இந்நிலையில், கொட்டும் மழையிலும் சொந்த ஊர் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அதிகளவில் திரண்டதால் பெருங்களத்தூர் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அடுத்த 4 நாட்களுக்கு கூடுதலாக 770 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் இதற்கான ஆன் லைன் டிக்கெட் புக்கிங்கை http://www.tnstc.in/TNSTCOnline என்ற இணையதளம் மூலம் புக் செய்து கொள்ளலாம் என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதேபோல, விடுமுறை முடிந்து, ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்பும் வகையில் கூடுதல் சிறப்பு பேருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *