தென் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட ‘ஜூம்லா’.. அப்படி ராகுல் என்னதான் சொன்னார்..?

மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த  நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நேற்று அனல் பறக்கும் வகையில் விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பேச்சுகள் பலராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டதுடன் ஏராளமான பாராட்டுகளும் குவிந்தன. பேச்சுக்கு இடையில் அடிக்கடி ‘ஜூம்லா’ என்ற வார்த்தையை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உபயோகம் செய்தார். ‘ஜூம்லா’ ஸ்ட்ரைக்கால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘ஜூம்லா’ என்பது தென் இந்தியர்கள் அதிகம் கேள்விப்படாத வார்த்தை. எனவே ராகுல்காந்தி எதனை குறிப்பிட்டு அப்படி பேசினார் என பலரும் கூகுளில் அதனை தேட தொடங்கினர். ராகுல்காந்தி பேசிக்கொண்டிருக்கும் போதே கர்நாடாகா, தமிழகத்தை சேர்ந்த பலரும் அதற்கு அர்த்தம் கண்டுபிடிக்க முயன்றனர். இதனால் கூகுள் தேடலில் ‘ஜூம்லா’ நேற்று உச்சத்தை தொட்டது. குறிப்பாக கர்நாடகாவை சேர்ந்தவர்கள்தான் கூகுளில் ‘ஜூம்லா’ வார்த்தையை அதிகம் தேடியுள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும், அடுத்ததாக தெலங்கானா, கேரளாவை சேர்ந்தவர்களும் ‘ஜூம்லா’ வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டுபிடிக்க முயன்றது தெரியவந்துள்ளது.

கூகுள் ட்ரெண்டில் #RahulHugsModi எப்படி ட்ரெண்டானதோ அதேபோல கூகுள் தேடுதலில் ‘ஜூம்லா’ என்ற வார்த்தை பலராலும் தேடப்பட்டுள்ளது. ஜூம்லா என்பதற்கு ஹிந்தியில் ‘பொய் வாக்குறுதி’ என்பது அர்த்தமாகும். பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் பொய் வாக்குறுதியால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டிதான் ‘ஜூம்லா’என்ற வார்த்தையை ராகுல்காந்தி அடிக்கடி உபயோகம் செய்துள்ளார். ஹிந்தி வார்த்தை என்பதனாலேயே அர்த்தம் புரியாமல் தென் இந்தியர்கள் பலரும் அதற்கு அர்த்தம் கண்டுபிடிக்க அதனை கூகுளில் தேடியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *