தென்மேற்குப் பருவமழை மீண்டும் வலுப்பெற்றுள்ளது

தென்மேற்குப் பருவமழை கடந்த மே மாதம் 29-ஆம் தேதி தொடங்கியது. அந்தமான் பகுதிகளில் பருவமழை தொடங்குவதற்கான சாதக சூழல் கடந்த மே மாதம் மூன்றாம் வாரத்தில் தென்பட்டது. அதனைத் தொடர்ந்து மே 29-ஆம் தேதி வழக்கத்தை விட முன்னதாக கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள அரபிக்கடல் பகுதிகளில் பருவமழை தீவிரம் அடைந்தது.

இதைத் தொடர்ந்து சில தினங்களில் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்தது. தமிழகத்தில் உதகை, கோவை, தேனி, கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் ஜூன் இரண்டாம் வாரம் முதல் பரவலாக கன மழை பெய்தது.

இந்திய வானிலை ஆய்வு மையம் நீண்டகாலத்துக்கு முன் வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த ஆண்டு 96 சதவிகிதம் முதல் 104 சதவிகிதம் வரை தென்மேற்குப் பருவமழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த 10 தினங்களாக பருவமழையின் தாக்கம் தொய்வடைந்து காணப்பட்டநிலையில் வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கதேச கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக மீண்டும் வலுப்பெற தொடங்கி உள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி வரும் நாட்களில் பருவக்காற்றின் தாக்கத்தால் பல்வேறு மாநிலங்களில் பரவலாக கனமழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *