தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு வாய் திறக்காத பிரதமர் மோடிக்குக் கண்டனம்! – கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு வாய் திறக்காத பிரதமர் மோடிக்குக் கண்டனம்!

இது தொடர்பாக இன்று(மே.26) தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் கூட்டம் சென்னை, நிருபர்கள் சங்கத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனித நேய மக்கள் கட்சி, மே 17 இயக்கம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தமிழக அரசு கட்சி, தமிழர் திராவிட கழகம், பெரியார் திராவிட விடுதலைக் கழகம், இழந்தமிழகம், புதிய விடியல் கட்சி, உலக தமிழர் பேரவை, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உட்படக் கூட்டமைப்பின் பல்வேறு தமிழ் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வலியுறுத்தி தூத்துக்குடி மக்கள் தொடர்ந்து 100 நாட்களாக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். 100வது நாள் போராட்டத்தை ஒரு மிகப்பெரிய போராட்டமாக பல நாட்களுக்கு முன்பே திட்டமிட்டு அறிவித்து, அந்த மக்கள் நடத்திய 100வது நாள் போராட்டத்தில் காவல்துறை கொலைவெறித் தாக்குதலை மேற்கொண்டதில் இதுவரை 13 பேர் பலியாகி உள்ளனர் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறை கண்மூடித்தனமாக காக்கை, குருவிகளைச் சுடுவதுபோல் சுட்டு மிகப்பெரிய படுகொலையை நிகழ்த்தியுள்ளது. தூத்துக்குடியின் படுகொலை என்பது இன்று உலகம் முழுவதும் பேசப்படும் மிக மோசமான ஒரு படுகொலையாக மாறிப்போகியுள்ளது. இந்தப் படுகொலை மத்திய, மாநில ஆட்சியாளர்கள் திட்டமிட்டு பல நாட்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காகவும், போராட்ட உணர்வை நீர்த்துப்போகச் செய்யும் விதத்திலும் தமிழக காவல்துறை இந்த படுகொலைகளை நிகழ்த்தி உள்ளது. அதற்கான பல்வேறு ஆதாரங்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியாகிக்கொண்டிருக்கிறது.

போராட்டத்தை ஒடுக்குவதற்காகத் துப்பாக்கிச்சூட்டில் பயிற்சி பெற்ற காவலர்களை வரவைத்து நவீனத் துப்பாக்கிகளை பயன்படுத்தி இந்தப் படுகொலைகள் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. தமிழ் மக்களைத் தமிழக அரசே, தமிழக காவல்துறையே திட்டமிட்டு படுகொலை செய்துள்ளது. தூத்துக்குடியின் இந்தப் படுகொலைகளை கண்டித்து நடைபெறும் அனைத்துவிதமான போராட்டங்களை ஒடுக்குவதற்கும், போராட்டங்களில் ஈடுபடும் தலைவர்களை ஒடுக்கக் காவல்துறை முயல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இந்நிலையில் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை ஆறுதல் சொல்வதற்காக அவர்களைப் பார்க்க சென்ற அனைத்துத் தலைவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிக்கப்பட்ட மற்றும் காயமடைந்த மக்களையும், இறந்தவர்களின் உறவினர்களைப் பார்த்து ஆறுதல் கூற தூத்துக்குடிக்கு சென்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அவர்களைக் காவல்துறை தூத்துக்குடி நகரத்துக்குள் அனுமதிக்காமல் கைது செய்து மண்டபத்தில் அடைத்துவைத்து உணவு, தண்ணீர் ஏற்பாடுகூட செய்துத்தர மறுத்து இறுதியாக அவரை உழுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை உடைத்தார் என்ற வழக்கைக் காரணம் காட்டி கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதை தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பாக நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பொதுவாகவே தமிழ்நாட்டில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக போராடக்கூடியவர்கள், தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளுக்காகப் போராடக்கூடியவர்கள், காவிரி நதிநீர் உரிமைகளுக்காகப் போராடக்கூடிய தலைவர்கள் போராளிகள் அதைப் போன்று ஹைட்ரோ கார்பன், மீத்தேன் என்று போராடக்கூடிய அனைத்துத் தலைவர்கள் மீதும் போராளிகள் மீதும் காவல்துறை பல்வேறு அடக்குமுறைகளைத் தொடர்ந்து ஏவிக்கொண்டிருக்கிறது. அந்த அடக்குமுறையினுடைய ஒரு பகுதியாகத்தான் இன்று தோழர் வேல்முருகன் அவர்கள் கைது செய்யப்பட்டதை நாங்கள் பார்க்கிறோம்.

இன்று வேல்முருகன் அவர்கள் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு என்ற பெயரால் நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகளை ஒருங்கிணைத்துப் பல வருடங்களாகத் தொடர்ந்து தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகளுக்காக வலிமையான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இப்போது காவல்துறை மற்றும் தமிழக அரசு அதை அச்சுறுத்தலாக நினைத்து வேல்முருகனைக் கைது செய்துவிட்டால் இந்தப் போராட்டங்களை ஒடுக்கிவிடலாம் என்று நினைக்கிறதோ என்று தெரியவில்லை. சில தலைவர்களை கைது செய்தால் எங்களது போராட்டங்களை ஒடுக்க முடியாது. முன்பைவிட வீரியமாக போராட்டங்களை முன்னெடுப்போம்.

தோழர் வேல்முருகன் கைது செய்யப்பட்டாலும் வாழ்வுரிமை கூட்டமைப்பு வலிமையான போராட்டங்களை தமிழ்நாட்டின் உரிமைக்காகத் தொடர்ந்து முன்னெடுக்கும் என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். வேல்முருகன் அவர்களைக் கைது செய்ததற்குத் தமிழக அரசையும், காவல்துறையையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும் ஸ்டெர்லைட ஆலையை உடனடியாக இழுத்து மூட வேண்டும், கைது செய்யப்பட்டுள்ள வேல்முருகன், இயக்குநர் கெளதமன் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கைது செய்யப்பட்டுள்ள போராளிகள் அனைவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், தூத்துக்குடியில் நிகழ்த்தப்பட்டுள்ள திட்டமிட்ட காவல்துறையினுடைய படுகொலைக்கு காரணமாக இருந்த அனைத்து உயர் அதிகாரிகள் மீது உடனடியாக கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 03 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இந்தப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள், தலைவர்கள், ஜனநாயக சக்திகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மனித உரிமை அமைப்புகளின் தலைவர்கள் அனைவர்களும் அதில் பங்கேற்பார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன். தேவை என்று சொன்னால் இந்தப் போராட்டங்களை இதர மாவட்டங்களுக்கும் நாங்கள் நகர்த்திச்செல்வோம்.

உலகத்தையே உலுக்கிய ஒரு நிகழ்வு தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது. இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று வரை வாய்திறக்கவில்லை. உலகில் ஆங்காங்கே நடைபெறும் சிறு அசம்பாவித சம்பவத்திற்கெல்லாம் வாய் திறந்து தனது வருத்தத்தை பிரதமர் பதிவு செய்துள்ளார்.

தூத்துக்குடி மாநகரில் பொதுமக்களின் மீது மிகப்பெரிய படுகொலை நிகழ்த்தப்பட்டு இதுவரை 14 பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். அது அல்லாமல் இன்னும் 25 நபர்களா அல்லது 50 நபர்களா என்ற சந்தேகக்குறிகளோடு அந்தப் படுகொலைகளுடைய எண்ணிக்கைகளை மக்கள் அபாயத்தோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு சூழல் உருவாகியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள தலைவர்கள் எதிர்க்கட்சியின் தலைவர்களான ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களும் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்கள். ஆனால் இந்தியாவின் பிரதமரிடம் இருந்து ஒரு கண்டனம் இல்லை வருத்தம் இல்லை இன்னும் சொல்லப்போனால் நடைபெற்றுள்ள இந்தப் படுகொலையை இந்தியாவே கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து போராடிக்கொண்டிருக்கும் போது ஒரே ஒரு கட்சி மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அதையும் தாண்டி மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் திமிரோடு” நாங்கள் அப்பவே போராடினோம் அப்போது வந்திருந்தால் 14 நபர்கள் இறந்திருக்கமாட்டார்கள்”என்று பேசுகிறார். இவர்கள் நடைபெற்ற படுகொலைகளை கண்டித்து வருத்தம் தெரிவிக்க தயாராக இல்லை. ஆனால் போராடும் மக்களைத் திமிரோடுக் குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இது மத்திய அரசின் தூண்டுதலால்தான் தூத்துக்குடியில் போராட்டக்காரகள் மீதான தாக்குதல் நடைபெற்றிருக்குமோ என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது. எனவே, பாஜகவைத் தவிர தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தமிழக மக்கள் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக ஜீவாதார உரிமைகளுக்காக நடைபெறும் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்புகளின் போராட்டம் மிக வீரியத்தோடு தொடர்ந்து நடைபெறும். வேல்முருகன் மட்டுமல்ல எத்துணை தலைவர்கள் மற்றும் தொண்டர்களை கைது செய்தாலும் இந்தப் போராட்டங்களை ஒடுக்க முடியாது என்று தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் கூட்டமைப்பு சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இச்சந்திப்பின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷானாவாஸ், மனித நேய மக்கள் கட்சி பி.எஸ்.ஹமீது, தமிழக வாழ்வுரிமை கட்சி துணைத்தலைவர் பெரியார் சரவணன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில துணைத்தலைவர் அன்சாரி, திராவிட விடுதலைக் கழகம் தபசிகுமரன், மக்கள் அரசு கட்சி ரஜினிகாந்த், குடந்தை அரசன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அச.உமர் பாரூக்,மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கரீம், மாநில செயற்குழு உறுப்பினர். பாருக் உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *