தூத்துக்குடியில் ஆள் மாறாட்டம் செய்து துப்பாக்கிச் சூடு – சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் – ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் நிகழ்ந்திருக்கும் மர்மத்தைப் பற்றி அவையில் பேசுவதற்கு வாய்ப்பளிக்காத காரணத்தால் அதனைக் கண்டிக்கின்ற வகையில், கழக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு:

தளபதி: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. மக்களுடைய பேரணியை கண்காணிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு. பிரசாத் ஐ.ஏ.ஏஸ். அவர்கள் ஒரு உத்தரவு போட்டிருக்கிறார். என்னவென்றால், மக்கள் அங்கு நடத்திய பேரணிக்கு முதல் நாளே சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்ற நிலையிலே ஒன்பது நிர்வாகத் துறையினுடைய நடுவர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஆனால், துப்பாக்கிச் சூடு நடந்த பகுதிகளில் அப்படி நியமிக்கப்பட்டவர்கள் அந்த பேரணி நடைபெற்ற தினத்தில் பொறுப்பிலே இல்லை. ஆள் மாறாட்டம் செய்து வேறு அதிகாரிகளை அந்த இடத்திற்கு அழைத்து துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலை செய்திருக்கிறார்கள். ஆகவே, 13 பேர் துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்லப்பட்டதற்கும் போராட்டத்தை முன் நின்று நடத்தியவர்களை அடையாளம் கண்டு குறி வைத்து சுட்டதும் திட்டமிட்ட சதி.

தனியார் நிறுவனமான ஸ்டெர்லைட் ஆலைக்கு, தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதேபோல டி.ஜி.பியாக இருக்கக்கூடிய ராஜேந்திரன் அவர்கள் அந்த மாவட்டத்தில் இருந்த போலீஸ் அதிகாரிகள் எல்லாம் இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு எந்த அளவிற்கு துணைபோய் இருக்கிறார்கள், எந்த அளவிற்கு சதி திட்டம் தீட்டி இருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.

ஆகவே, இதுகுறித்து ஒரு கண்துடைப்புக்காக நியமிக்கப்பட்டிருக்கக் கூடிய இந்த விசாரணை கமிஷன் நிச்சயமாக பயனளிக்க போவதில்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. எனவே, இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை நடத்திட வேண்டும் என்கின்ற பிரச்சனையை சட்டமன்றத்திலே நேரமில்லா நேரத்தை பயன்படுத்தி நான் எழுப்புவதற்கு முயற்சித்தேன்.

அதுமட்டுமல்ல, இன்று காலையிலே நாங்கள் அவை துவங்குவதற்கு முன்பு பேரவைத் தலைவரிடத்திலே இதுகுறித்து பேசப்போகிறோம் என்று முன்கூட்டியே சொல்லி அவரும் முதலமைச்சரிடத்திலே தகவல் சொல்லி ஒப்புதலும் தந்திருந்தார்கள். நான் பேசுவதற்கு தயாராக இருந்தேன் ஆனால், திடீரென்று சபாநாயகர் மூலமாக எங்களுக்கு கிடைத்த செய்தி முதலமைச்சர் பேசுவதற்கு தயாராக இல்லை. எனவே, அதை பேசவேண்டாம் அப்படியும் நீங்கள் மீறி பேசினால் அதை நாங்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிடுவோம். உங்களை பேச அனுமதிக்க மாட்டோம் என்ற அந்த உத்தரவையும் எங்களுக்கு போட்டிருக்கிறார்கள். எனவே, மிக முக்கியமான இந்தப் பிரச்சினையை பேச விடாமல் தடுத்த காரணத்தால் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையிலே திராவிட முன்னேற்றக் கழகம் ஜனநாயக ரீதியிலே அதைக் கண்டித்து வெளி நடப்பு செய்திருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *