தாய்லாந் குகையில் சிக்கிய சிறுவர்களை முதல் கட்டமாக 6 சிறுவர்கள் மீட்பு

தாய்லாந்தில் 15 நாட்களாக குகையில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி தொடங்கிய நிலையில், ஆறு சிறுவர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ச்சியாங் ராய் மாகாணத்தில் உள்ள Tham Luang Nang Non குகையில் 15 நாட்களாக சிக்கியுள்ள 12 இளம் கால்பந்து அணி வீரர்களையும், பயிற்சியாளரையும் மீட்கும் பணி இன்று காலை தொடங்கியது. இதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நீச்சல் மற்றும் நீரில் மூழ்கும் வீரர்களான டைவர்ஸ் ((divers)) 18 பேர் களமிறங்கினர்.

இவர்கள் குகைக்குள் சிக்கி இருப்பவர்களை 4 குழுக்களாக பிரித்து வெளியில் அழைத்து வரவுள்ளனர். இதன்படி முதல் குழுவில் 4 பேர், இரண்டு, மூன்று மற்றும் நான்காம் குழுக்களில் 3 பேர் என பிரிக்கப்பட்டு மீட்கப்படுகின்றனர். மிக குறுகலான பாதை, ஆக்சிஜன் பற்றாக்குறை, சேறு நிறைந்த வெள்ளம் ஆகிய சூழ்நிலைகளில், நேரத்திற்கும், கனமழை அச்சுறுத்தலுக்கும் எதிரான மீட்பு போராட்டம் தொடங்கியது. உள்ளே சென்றுள்ள வீரர்கள், குறுகலான பாதையை எந்திரத்தால் குடைந்து வழி ஏற்படுத்தினர்.

சிறுவர்களை மீட்பதற்கான திட்டத்தை தாய்லாந்து அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, கயிறுகள் மூலம் சிறுவர்களை இணைத்து, அவர்களுக்கு மீட்புக் குழுவினர் முதுகில் சுமக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் பிராண வாயு வழங்குவர். ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க குறிப்பிட்ட தொலைவில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கப்படுகின்றன.

ஒரு சிறுவருக்கு இரண்டு வீரர் என்கிற அடிப்படையில் மீட்புப் பணி நடைபெறுகிறது. முதல் குழுவை குகையை விட்டு வெளியே அழைத்து வர 11 மணி நேரம் ஆகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மொத்த பேரையும் மீட்க 2 முதல் 4 நாட்கள் ஆகலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆறு சிறுவர்கள் மீட்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களை ஆம்புலன்சில் மருத்துவமனை கொண்டு செல்வதாக வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *