தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் ஜெம் நிறுவனம்: க. மாதவன் வரவேற்பு

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட ஜெம் நிறுவனம் தயாராகி உள்ளது எனவும் வேறு இடம் வழங்க கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் பத்திரிக்கை செய்திகள் கூறுகிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்க தாமதம் ஆவதால் ஜெம் நிறுவனத்துக்கு இழப்பு அதிகமாகி வருவதாலும் லாப நோக்கோடு தொழில் செய்யும் அந்நிறுவனம் ,நெடுவாசலில் திட்டப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசிடமிருந்து அனுமதி கிடைக்காததாலும் திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற இடம் கோரி, மத்திய எரிவாயு மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது.

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிய ஒவ்வொரு தமிழக போராளிக்கும் கிடைத்த வெற்றி இது. இந்த போராட்டத்தில் அணில் அளவு பங்கு எம்ஜிஆர்ஜெஜெ திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் உண்டு என்பதில் அதன் பொதுச் செயலாளர் என்கிற முறையில் பெருமிதம் கொள்கிறேன்.

இப்பொழுது மாற்று இடம் என்று வருகிறபோது, அந்த மாற்று இடம் மாற்று மாநிலமாக இருத்தல் அவசியம். அது குஜராத் ஆக இருந்தாலும் சரி. மோடி அவர்கள் தம் சொந்த மாநிலத்திற்கு பெருமை சேர்த்து கொள்ளட்டும்.

மாற்று மாநிலம் எந்த மாநிலமாக இருந்தாலும் அது மக்களின் எதிர்ப்பில்லாத, மக்களின் வாழ்வாதாரத்தை கெடுக்காத, மக்களின் ஒப்புதலோடு நடைமுறைபடுத்துதல் வேண்டும். ஏனெனில் இப்போது நடப்பது மக்களாட்சியே தவிர மன்னராட்சி கிடையாது.

மாற்று இடம் கேட்டுள்ள ஜெம் நிறுவனத்திற்கு செவி சாய்த்து மத்திய அரசு மிக விரைவில் மாற்று இடத்தை மாற்று மாநிலத்தில் அறிவிக்கவேண்டும். இதனை மாநில அரசு மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *