தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தை

தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் இன்று மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறியுள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனை சமாளிக்கும் வகையில், சென்னை குடிநீர் வாரிய நீர் நிரப்பு நிலையங்களிலிருந்து லாரிகள் மூலம் குடிநீரைப் பெற்றுக் கொள்ளலாம் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம், கடந்த 3-ம் தேதி உத்தரவிட்டது. மேலும், வணிக பயன்பாட்டிற்கு நிலத்தடி நீரை உறிஞ்சுதலை முறைப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள், காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் 300 கேன் வாட்டர் உற்பத்தி நிறுவனங்களும் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. இதனால் சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தண்ணீர் தட்டுபாட்டினால் எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகம் இன்று மூடப்பட்டுள்ளது. தியேட்டரைத் தவிர மற்ற கடைகள் எதுவும் செயல்படவில்லை.

இந்நிலையில் இன்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முதலமைச்சரை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார். அதன்படி இன்று மாலை 4 மணிக்கு தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார். விதிமுறைக்குட்பட்டு நிலத்தடி நீர் எடுக்க வழிவகை செய்யப்படும் என்றும், ஐ.டி நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தண்ணீரை கொண்டு செல்ல வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இன்றைக்குள் தீர்வு எட்டப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *