டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை மேற்கொள்ள 256 கோடி ரூபாய் வழங்க வேண்டும் ; சென்னை வந்த மத்திய குழுவிடம் தமிழக அரசு கோரிக்கை

டெங்கு காய்ச்சலுக்கு 18 பேர் மட்டுமே பலியானதாக, மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிக்கை அளித்துள்ளது. டெங்கு காய்ச்சல் குறித்து தமிழக மக்கள் அச்சம் அடைய தேவையில்லை என சென்னை வந்துள்ள மத்தியக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. மருத்துவமனையில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த நோயை, முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு இலவச சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்நிலையில், தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் டெங்கு சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நில வேம்பு குடிநீருக்காக 2 ஆயிரம் கிலோ பொடி கையிருப்பு உள்ளதாகவும், டெங்கு காய்ச்சலை கண்டறிய தமிழகம் முழுவதும் 125 சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கும், முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் என்று அந்த அறிக்கையில், தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய சென்னை வந்துள்ள மருத்துவர் அசுதோஷ் பிஸ்வாஸ் உள்ளிட்ட குழுவினர், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், எந்தெந்த பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது என்பதையும், உயிரிழப்பு குறித்த விவரங்களையும், மத்திய குழுவினர் கேட்டறிந்தனர். அப்போது, டெங்கு ஒழிப்புப் பணிக்கு 256 கோடி ரூபாய் தேவைப்படுவதாக மத்திய குழுவிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய குழுவினர், தண்ணீரை தேக்கி வைக்கும் பழக்கமே டெங்கு கொசுக்கள் உருவாக காரணம் என்றனர்.

மேலும், டெங்கு பாதிப்பு நிலவரம் தொடர்பான புள்ளி விபரம் தமிழக அரசு சார்பில், இன்று மத்திய அரசிடம் அறிக்கையாக அளிக்கப்பட்டுள்ளது. அதில், டெங்கு காய்ச்சலுக்கு 18 பேர் மட்டுமே பலியானதாகவும், மொத்தம் 12 ஆயிரத்து 324 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மத்திய அரசிடம் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *