டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் ; முதலமைச்சரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் கோரிக்கை.

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என முதலமைச்சரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்து பேசினார். அப்போது, முதலமைச்சருக்கு எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து கொடுத்தார். இந்த சந்திப்பின்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார், துணைப் பொதுச்செயலாளர்கள் வன்னியரசு, எஸ்.எஸ்.பாலாஜி, தலைமை நிலைய செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர். முதலமைச்சருடனான சந்திப்புக்குப் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த தொல்.திருமாவளவன், தமிழகத்தில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களுக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாக குறிப்பிட்ட எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், அம்பேத்கர் மணிமண்டபத்தை பராமரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், கெயில் திட்டம் மாற்று வழியில் வர வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியோடு இருக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாகவும் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *