சொந்தமாக லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் தொடங்கிய 8ஆம் வகுப்பு மாணவன்!

பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பு படித்து வரும் நடுத்தர பொருளாதார வகுப்பைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் 500 நபர்களுக்கு வேலையளித்து சொந்தமாக தொழில் தொடங்கி அசத்தியுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த திலக் மேத்தா என்ற 13 வயது சிறுவன் அங்குள்ள புறநகர் பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறான். அந்த வயதுள்ளவர்களைப் போலவே இவனும் இரவில் பணி முடிந்து திரும்பும் தன் தந்தைக்காக ஆவலுடன் காத்திருக்கிறான். ஆனால் அந்த ஒற்றுமை அத்துடன் முடிவு பெறுகிறது. அவன் வயது சிறுவர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டு அசாத்திய சாதனையை சிறுவன் திலக் மேத்தா நிகழ்த்தியுள்ளார்.

வளரும் தொழில் முனைவோராக மாறியுள்ள சிறுவன் திலக் மேத்தா, லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் ஒன்றை தொடங்கி, அந்த யோசனையை வங்கி அதிகாரி ஒருவரிடம் எடுத்துக்கூறி அவரை வேலையைவிட்டுவிட்டு தனது நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக சேர வைத்ததுடன், தனது நிறுவனத்தில் உலகப் புகழ்பெற்ற டப்பாவாலாக்களையும் இணைத்து சிறிய அளவிலான கூரியர் நிறுவனத்தை தொடங்கியதுடன் தனது நிறுவனத்தின் விற்றுமுதல் இலக்காக 2020க்குள் 100 கோடி ரூபாயை நிர்ணயித்து அசரவைத்துள்ளான் இச்சிறுவன்.

இந்த நிறுவனத்தை தொடங்க என்ன காரணம்?

கடந்த ஆண்டு மும்பையின் மறுமுனையில் இருந்து புத்தகம் ஒன்று சிறுவன் திலக்கிற்கு உடனடியாக தேவைப்பட்டிருக்கிறது, ஆனால் அலுவலகத்தில் வேலைமுடிந்து களைப்பாக திரும்பும் தனது தந்தையை இதற்காக அவன் தொந்தரவு செய்ய வேண்டுமே என்ற என்ற தயக்கம் ஏற்பட்ட சமயத்தில் பேப்பர்கள், சிறு பார்சல்களை மும்பை நகருக்குள் ஒரே நாளில் டெலிவரி செய்யும் நிறுவனத்தை தொடங்கும் யோசனை அவனுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்த யோசனையை தனது தந்தையிடம் தெரிவித்த சிறுவன் திலக், இதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினான்.

சிறுவன் திலக்கின் தந்தை விஷால், Rushabh Sealink என்ற லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் தான் பணியாற்றிவந்தார். அவருடைய உதவியை சிறுவனால் கோரியிருக்க முடியும் என்ற சூழலில், இது தொடர்பாக தீவிரமாக ஆராய்ந்து, 4 மாத காலத்திற்கு சோதனை முயற்சியில் ஈடுபட்டு பின்னர் அதிகாரப்பூர்வமாக Papers N Parcels (PNP) நிறுவனத்தை தொடங்கியுள்ளார் திலக்.

இது என்னுடைய கனவு, இத்தொழில் பெரிதாக விரிவடைய கடினமாக உழைப்பேன் என்று திலக் நம்பிக்கைபட தெரிவிக்கிறார்.

இந்த நிறுவனம் எவ்வாறு செயல்படுகிறது?

Papers N Parcels (PNP) நிறுவனத்திற்காக பிரத்யேக மொபைல் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது, ஒரு நாளைக்கு 1,200 பார்சல் டெலிவரிகளை மேற்கொள்ள 200 முழு நேர ஊழியர்கள் மற்றும் 300 டப்பாவாலாக்களை நியமித்துள்ளார்.

இந்த செயலி மூலம் யார் வேண்டுமானாலும், ஆர்டர்கள் செய்யலாம் எனவும், மதியம் 2.30 மணிக்குள் கொடுக்கப்படும் ஆர்டர்கள் ஒரே நாளில் உறுதியாக டெலிவரி செய்யப்படும் எனவும், பார்சல்கள் எங்கு இருக்கின்றன என்பது தொடர்பான நிகழ்நேர தகவல்கள், பார்சலை  டெலிவரி எடுத்துவருபவர் யார் என்பது போன்ற தகவல்களை இந்த செயலி மூலமாக ஆர்டர் கொடுத்தவர்கள் அறிந்து கொள்ளலாம்.

டப்பாவாலாக்கள்:

இந்த நிறுவனத்தை தொடங்க Rushabh Sealink நிறுவனம் ஆரம்பகட்ட முதலீட்டை செய்துள்ளது. கடைக்கோடி பகுதிகளுக்கும் சென்று பார்சல்களை டெலிவரி செய்ய உலகப் பிரபலம் வாய்ந்த மும்பையின் டப்பாவாலாக்களுடன் ( உணவு டெலிவரி செய்பவர்கள்)  Papers N Parcels (PNP) புரிந்துணர்வு செய்துள்ளது.

அந்த நாளுக்குரிய பணிகளை செய்துமுடித்த பின்னர் PNP நிறுவனத்திற்காக பார்சல்களை டெலிவரி செய்யப்போவதாக மும்பை டப்பாவாலாக்கள் கூட்டமைப்பின் செய்தித்தொடர்பாளர் சுபாஷ் தலேகர் கூறினார்.

2020ல் 100 கோடி ரூபாய் வர்த்தக இலக்கு:

PNP நிறுவனம் தற்சமயம் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு டப்பாவாலாவிற்கும் அளிக்கும், பின்னர் டெலிவரி அளிக்கும் ஒவ்வொரு பார்சலுக்கு ஏற்ப பணம் அளிக்கப்படும்.

மும்பை நகருக்குள் அனுப்பப்படும் பார்சல்களுக்கான சந்தையில் 20%
PNP நிறுவனம் கைப்பற்ற இலக்கு நிர்ணயித்துள்ளது. 2020ஆம் ஆண்டுவாக்கில் 100 கோடி ரூபாய் வர்த்தக இலக்காக நிர்ணயித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *