சென்னையில் பேருந்து தினம் கொண்டாடுவதாக பேருந்துகளை சிறைப்பிடித்து அவ்வபோது அட்டகாசம் செய்யும் மாணவர்கள், ஒரு படி மேலே போய் புற நகர் ரயிலையே சிறைப்பிடித்து ஆயுதங்களுடன், பட்டாசு வெடித்து ரயில் தினம் கொண்டாடியது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுதங்களுடன் படிக்கட்டில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள், பிளாட்ஃபார்மில் பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்டவற்றை உரசியபடி பொறிபறக்கச் செல்லும் இந்த காட்சி சென்னை அடுத்த நெமிலிச்சேரி ரெயில் நிலையத்தில் அரங்கேறியது. மேலும், பட்டா கத்தியை கையில் வைத்து சுழற்றியபடியே, பயணிகளை மிரட்டினர். ரயிலை விட்டு இறங்கியதும் அவர்கள் பச்சையப்பன் கல்லூரியின் மாணவர்களென கோஷமிட்டுக் கொண்டு கத்தியை சுழற்றியபடி குத்தாட்டம் போட்டனர். ரயிலில் தீப்பிடித்தால் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று கருதாமல் பட்டாசை ரயில்நிலையத்திலேயே கொளுத்தி ரயில் தினம் கொண்டாடினர். இச்சம்பவம் ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக, அம்பத்தூர் துணை ஆணையர் சர்வேஷ்ராஜ் உத்தரவின் பேரில் ஆவடி உதவி ஆணையர் நந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையை துவக்கிய சில மணி நேரங்களிலிலேயே சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களை ஓடும் ரயில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர். திருநின்றவூரை சேர்ந்த 4 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்கள் மீது 5 வழக்குகள் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *