கேரள அரசின் உத்தரவை ஏற்று, அர்ச்சகர் பணியை தொடங்கினார்கள் தலித் இளைஞர்கள் ; முதலமைச்சர் பிரனாய் விஜயனின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு….

கேரளாவில் பிராமணர்கள் இல்லாத மற்ற சமூகத்தினர் அட்சகர்களாக நியமிக்கப்பட்டதை அடுத்து, அம்மாநிலத்தின் முதல் தலித் அட்சகராக யது கிருஷ்ணன் தனது பணியை தொடங்கினார்.

கேரள மாநிலத்தில் இருக்கும் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் கீழ் ஆயிரத்து 248 கோயில்கள் செயல்பட்டு வருகின்றன. பிரபல சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளிட்ட பல பிரசித்தி பெற்ற கோயில்கள் இந்த வாரிய நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்றது. கடந்த வாரம், பிராமண சமூகத்தினர் இல்லாத 36 பேர் இக்கோயில்களில் அட்சகர்களாக நியமனம் செய்யப்பட்டனர். குறிப்பாக 6 தலித்துக்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். நாடு முழுவதும் இந்த நியமன அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு எழுந்தது. கேரள அரசை பாராட்டி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், திருவில்லா அருகே முள்ள மணப்புரம் சிவன் கோவிலில் அம்மாநிலத்தின் முதல் தலித் அட்சகராக, யது கிருஷ்ணன் என்ற இளைஞர் தனது பணியை தொடங்கினார். தன்னுடைய குருநாதரிடம் ஆசி பெற்ற பின்னர் அவர் கருவறைக்குள் நுழைந்து பூஜைகள் செய்தார்.

திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த யது கிருஷ்ணன் முதுநிலை பட்டத்தில் சமஸ்கிருதத்தை பாடமாக எடுத்து இறுதியாண்டு படித்து வருகிறார். தனது 15 வயது முதலே வீட்டின் அருகில் உள்ள கோவிலில் பூஜை செய்து வந்ததாகவும், பின்னர் முறைப்படி சமஸ்கிருதம் கற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் தாழ்த்தப்பட்டவர்கள் ஆலய நுழைவு போராட்டம் நடத்தி 81 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இதே நேரத்தில், யது கிருஷ்ணன் கருவறைக்குள் நுழைந்துள்ளது நிஜமாகவே சமூக புரட்சிதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *