கும்பகோணம் நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கப்படுகிறது அபிஷேகமூர்த்தி சிலை

கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக, பழனி முருகன் கோவில் அபிஷேகமூர்த்தி சிலையை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் எடுத்துச் சென்றனர்.

ஐம்பொன்னாலான அபிஷேகமூர்த்தி சிலை 2004ஆம் ஆண்டு கோவிலில் நிறுவப்பட்டது. ஆனால் இந்த சிலை உயரமாக இருந்ததால் மூலவர் சிலை மறைப்பதாகக் கூறி பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை அடுத்து சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இந்த அபிஷேகமூர்த்தி  சிலை செய்ததில் 10 கிலோ தங்கம் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகார் எழுந்தது. முறைகேடு நடைபெற்று இருப்பதை உறுதி செய்த சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், அப்போதைய கோவில் இணை ஆனையர் ராஜா, தலைமை ஸ்தபதி முத்தையா, நகை மதிப்பீட்டாளர் தெய்வேந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.

சிலையை மேற்கொண்டு ஆய்வு செய்வது குறித்தும், விசாரணையை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் கும்பகோணம் நீதிமன்றத்தில் சிலையை ஒப்படைக்க முடிவு செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவு பெற்று, இன்று காலை பழனியில் இருந்த அபிஷேகமூர்த்தி சிலையை கும்பகோணம் எடுத்துச் சென்றனர்.

ஏடிஎஸ்பி ராஜாராம் தலைமையிலான போலீசார், பழனி வட்டாட்சியர் முன்னிலையில் சிலையைப் பெற்றுக் கொண்டனர். பிற்பகலில் சிலை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது. நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் சிலை, காப்பகத்தில் வைக்கப்படுமா அல்லது மீண்டும் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படுமா என்பது பிற்பகலில் தான் தெரிய வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *