`குடும்ப அட்டை பெற்றாலும் இலங்கை பெண்ணை இந்திய பிரஜையாக கருத முடியாது’

தமிழகத்தில் ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை பெற்றாலும் இலங்கை பெண்ணை இந்திய பிரஜையாக கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இலங்கை போர் காரணமாக கடந்த 1989-ம் ஆண்டு தமிழகம் வந்தவர் ஜெயந்தி. திருச்சியில் வசித்து வந்த அவர், பிரேம்குமார் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.

 தமிழகத்தில் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் ஆகிய ஆவணங்களை பெற்ற அவர்,
2007ம் ஆண்டு முதல் இத்தாலியில் வீட்டு வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், தனது மூத்த மகள் பிரியங்காவின் திருமணத்துக்காக கடந்த ஜூன் 22ம் தேதி சென்னை வந்த அவரை, சென்னை விமான நிலையத்தில் சிறை பிடித்துள்ளதாகவும் சகோதரி திருமணத்தில் கலந்து கொள்ள ஏதுவாக அவரை விடுவிக்கவும் இத்தாலி திரும்ப அனுமதிக்கவும் கோரி ஜெயந்தியின் இளைய மகள் திவ்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜா, ஜெயந்தி இலங்கையில் பிறந்து அந்நாட்டு பாஸ்போர்ட்டை ஏற்கனவே பெற்றுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்தியாவில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை பெற்றிருந்தாலும், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இருந்து இந்திய பிரஜை என அங்கீகாரம் பெறாததால் ஜெயந்திக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்ய மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *