காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை எதிர்க்கும் வழக்கு… நீடிக்கிறது பதற்றம்..!

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வரும் அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய விசாரணை நடத்தவுள்ளது. இதனால், காஷ்மீரில் இரண்டு நாள் வேலைநிறுத்தம் நடத்த விடுக்கப்பட்ட அழைப்பால் பதற்றம் நிலவுகிறது. அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.

நாடு சுதந்திரம் பெற்றது முதல் காஷ்மீரில் நீடித்த அமைதியற்ற சூழலையடுத்து, 1954ஆம் ஆண்டு அந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்கீழ் சட்டப்பிரிவு 370ன் அடிப்படையில் இதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்ட நிலையில், 1954ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேருவின் பரிந்துரையின்படி குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அரசியல் சட்டத்தில் இதற்காக 35ஏ பிரிவை சேர்த்து உத்தரவிட்டார்.

இதன்படி, காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு உரிமைகளும், சலுகைகளும் அளிப்பதுடன், காஷ்மீரில் மற்ற இந்தியர்கள் வேலைவாய்ப்பு பெறவோ, சொத்து வாங்கவோ இயலாது. நாடாளுமன்றத்தால் இயற்றப்படாத 370 சட்டப்பிரிவு செல்லாது என்றும், அரசியல் சட்டப்பிரிவு 368-யின்படி நாடாளுமன்றத்துக்கே அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய அதிகாரமுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வி தி சிட்டிசன்ஸ் என்ற அரசுசாரா அமைப்பின் சார்பில் தொடரப்பட்ட மனுவில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவு 35ஏ மற்றும் 370 ஆகியவை செல்லாது என்று அறிவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒரு மாநிலத்தில் மற்ற மாநிலத்தவர்கள் வேலைவாய்ப்பு பெறவோ, சொத்து வாங்கவோ தடை விதிப்பது நாட்டின் ஒருமைப்பாட்டை பாதிப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அரசியல் சட்டத்தின் 14, 19 மற்றும் 21ஆம் பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் என்பதால், சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தனது அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு அப்போதைய குடியரசுத் தலைவர் செயல்பட்டாரா? அவர் பிறப்பித்த 35ஏ சட்டப் பிரிவை அப்போதைய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாததால், அது செல்லத்தக்கதா? என்பவை உச்ச நீதிமன்றத்தின் முன் கேள்வியாக இருக்கின்றன.

இந்நிலையில், இன்று விசாரணைக்கு வரும் இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றலாமா என்பது குறித்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு முடிவு செய்யவுள்ளதாக தெரிகிறது. சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக் கோரும் வழக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து, காஷ்மீரில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் கடையடைப்பு நடைபெற்று வருகிறது. தலைநகர் ஸ்ரீநகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பதற்றம் நீடிப்பதால், பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அமர்நாத் பனிலிங்க தரிசனத்துக்கான யாத்திரிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *