கல்லணையில் இருந்து பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறப்பு…

மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், காவிரி டெல்டா விவசாயிகளின் பாசனத்திற்காக, கல்லணை இன்று திறக்கப்படுகிறது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக, கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், கர்நாடக அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரிநீராக திறக்கப்படுவதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இரு வாரங்களாக அதிகரித்து காணப்படுகிறது.

டெல்டா பாசனத்திற்காக கடந்த 19ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையைத் திறந்து வைத்தார். இந்த தண்ணீர், நேற்று திருச்சி முக்கொம்புவிற்கு வந்தடைந்த நிலையில் அங்கிருந்து திறக்கப்பட்டது.. திருச்சி மாவட்ட விவசாயிகள், மலர்கள் மற்றும் நெல் ஆகியவற்றை தூவி, காவிரியை வரவேற்றனர்.

திருச்சி முக்கொம்புவில் ஏற்கனவே தேக்கப்பட்ட தண்ணீரோடு, புதியதாய் வந்த தண்ணீரும் திறக்கப்பட்டு கல்லணையை வந்தடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, காவிரி டெல்டா பாசனத்திற்காக, கல்லணை இன்று திறக்கப்படுகிறது. வேளாண்துறை அமைச்சர் துரைகண்ணு, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உள்ளிட்ட 5 அமைச்சர்கள், மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் தண்ணீரை திறந்துவிடுகின்றனர்.

இந்த நிகழ்வில், நான்கு மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்கின்றனர். கல்லணையிலிருந்து, காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகியனவற்றில், தண்ணீர் திறந்துவிடப்படுகிறது…. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீரின் மூலம், 12 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறும்…

மேட்டூர் அணை நீர்மட்டம்  நேற்று மாலை 117 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வரும் நிலையில் பாசனத்திற்காக 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. திறக்கும் நீரை விட, அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணை இன்று மாலைக்குள், 120 அடி என்ற தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணை முழு கொள்அளவை எட்டினால், 16 கண் மதகு வழியாக நீர் திறப்பு அதிகரிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *