கர்மவீரர் காமராஜரின் 116 வது பிறந்த நாள் – கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

ஏழு சதவீதமாக இருந்த தமிழகத்தின் கல்வி கற்றோர் எண்ணிக்கையை, ஆட்சியில் இருந்த பத்தே ஆண்டுகளில் 37 சதவீதமாக உயர்த்தியவர் கல்விக்கண் திறந்த காமராஜர்.  அந்த ஏழை பங்காளனின் சாதனைகளைப் போற்றுகிறது இந்த செய்தி தொகுப்பு

8 அமைச்சர்கள்…! எண்ணற்ற திட்டங்கள்…! மக்களை சோம்பேறியாக்கும் இலவசங்கள் அன்று இல்லை..! ஏழைக் குழந்தைகள் பள்ளிக்கூடத்தை தேடிவர மதிய உணவு மட்டுமே அன்று இலவசம்..! பாதுகாப்பும், ஆடம்பரமும் இன்றி தமிழகத்தின் வீதிகளில் ஒரு முதல் அமைச்சரால் சென்று வர முடியும் என்பதை தனது எளிமையால் நிரூபித்து, லட்சகணக்கான உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் கர்மவீரர் காமராஜர்..!

1954 தொடங்கி 1963 வரையிலான காமராசரின் ஆட்சிகாலம் தமிழகத்தின் பொற்காலம் என்றே இன்றளவும் புகழப்படுகிறது..! அவர் ஆட்சி பொறுப்பேற்ற போது 5 ஆயிரத்து 303 ஆக இருந்த ஆரம்ப பள்ளிகளின் எண்ணிக்கை, பத்தே ஆண்டுகளில் 26 ஆயிரத்து 700 ஆக உயர்த்தப்பட்டது. நீண்ட தூரம் நடந்து சென்று படித்தால் குழந்தைகள் சோர்வடைவார்கள் என்பதால் 3 மைல் இடைவெளியில் ஒரு பள்ளி இருக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் 471 ஆக இருந்த உயர் நிலைப்பள்ளிகள் 1,361 ஆக உயர்த்தப்பட்டது. 28 ஆக இருந்த கல்லூரிகளின் எண்ணிக்கை 50 ஆக உயர்த்தப்பட்டது. 6 ஆக இருந்த பயிற்சி கல்லூரிகள் 17 ஆக உயர்ந்தது. 19 மாதிரி தொழில் பள்ளிகள், 6 செய்முறை தொழிற்பயிற்சி நிலையங்கள், 19 பொது வசதி பட்டறைகள், 5 சமூக நல நிலையங்களை புதிதாக உருவாக்கித் தந்ததோடு பள்ளியில் அனைவரும் சமம் என்பதை உணர்த்த சீருடைத் திட்டத்தை கொண்டுவந்து தமிழகம் கல்வியில் கண்திறக்க உதவியவர் பெருந்தலைவர் காமராஜர்..!

தற்போது புதிதாக ஒரு தொழிற்சாலை அமைப்பதற்கே பல அமைப்புகளுடன் போராட வேண்டிய நிலை இருக்க..

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், உதகையில் இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை, கிண்டியில் அறுவைச் சிகிச்சைக் கருவிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலை, திருச்சி பெல் தொழிற்சாலை, சிமெண்ட் தொழிற்சாலைகள். மேட்டூர் காகித ஆலை, கிண்டி தொழிற்பேட்டை மற்றும் அரசு சர்க்கரை ஆலைகள் என 10 ஆண்டுகளில் ஏராளமான தொழிற்சாலைகளை நிறுவி லட்சக் கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிய அன்றைய ஆற்றல்மிகு முதல்வர் காமராஜர்..!

கன்னியாகுமரி மலை கிராம மக்களின் தாகம் தீர்க்க மாத்தூர் தொட்டிப் பாலம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், கன்னியாகுமரி நெய்யாறு திட்டம், கோவை பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம், பவானி அணை, மேட்டூர் அணை, மணிமுத்தாறு அணை, அமராவதி அணை, வைகை அணை, சாத்தனூர் அணை, கிருஷ்ணகிரி அணை, ஆரணியாறு அணை மற்றும் 1,600 ஏரிகள் என இன்றளவும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளின் பாசனத் தேவையை காமராஜரின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நீர்ப் பாசன திட்டங்கள் தான் பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக நெய்வேலியில் இருந்து மின்சாரத்தை கொடுத்து, கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை தமிழகத்திற்கு தடையின்றி சாமர்த்தியமாக பெற்றுதந்த பச்சை தமிழன் காமராஜர்..!

10 ஆண்டுகள் தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்து காலத்தால் நிலைத்து நிற்கும் திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்திய காமராசருக்கு வாரிசு என்று எவரும் இல்லை..! அவரிடம் இருந்த சொத்து.. நான்கு கதர் வேட்டிகள், 4 சட்டைகள் அதில் ஒன்று கிழிந்தது, 350 ரூபாய் ரொக்கப்பணம்  இவை மட்டுமே..!

சாதனைகள் பல படைத்த காமராஜரின் 116 வது பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசால் இன்று கொண்டாடப்படுகிறது. நன்றி உள்ள மனிதர்கள் உள்ளவரை கர்மவீரர் காமராசரின் புகழ் இவ்வுலகில் நிலைத்து நிற்கும்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *