ஏழைகளுக்கு உதவி செய்வதுதான் உண்மையான இறை தொண்டு: ரஜினிகாந்த்

ஏழைகளுக்கு உதவி செய்வது தான் உண்மையான இறை தொண்டு என்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

புதிய நீதிக்கட்சி தலைவரும், எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக வேந்தருமான ஏ.சி.சண்முகத்திற்கு வெளிநாட்டு பல்கலைகழகம் ஒன்று டாக்டர் பட்டம் வழங்கியது. இதனைத்தொடர்ந்து அவருக்கு தனியார் அமைப்பு சார்பாக சென்னையில் பாராட்டு விழா நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,”ஏ.சி.சண்முகத்தை பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கும். அவர், பல கல்வி நிறுவனங்களை நடத்தி, அதன் வழியாக, நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறார். எப்போதும் அவர் டென்ஷன் இல்லாமல், புத்துணர்ச்சியோடு இருக்கிறார். அவரிடம் எனக்கு பிடித்தது அவருடைய ஹேர் ஸ்டைல் தான், நானும் அப்படியே வச்சி இருக்கணும்” என்றார்.

இதனைதொடர்ந்த தனது பாணியில் குட்டி கதை ஒன்றை ரஜினிகாந்த் கூறினார்.

“பரமஹம்சர் ஒரு நாள் காசிக்கு செல்ல நினைத்து, சேர்த்து வைத்த பணத்தோடு புறப்பட்டார். போகும் வழியில், சில ஏழைகளை கண்டார். வைத்திருந்த பணத்தை, அவர்களுக்கே செலவு செய்தார். அதன் வழியாக, அவர்கள் முகத்தில் இறைவனை கண்டு, காசி விஸ்வநாதரை தரிசித்து விட்டதாக கூறினார். ஏழைகளுக்கு உதவி செய்வது தான் இறை தொண்டு” என்றார்.

மேலும் பேசிய அவர், “உழைப்பு, முயற்சியால் மட்டுமே எல்லாரும் வெற்றி பெற முடியாது. ஆண்டவன் அருள் வேண்டும். நமக்கு நல்ல எண்ணம் வேண்டும். அப்போது தான் வெற்றி கிடைக்கும். மனம் போகும் போக்கில் போகக்கூடாது. நம் உடலை சுத்தமாக வைத்து கொண்டால், மனமும் சுத்தமாக இருக்கும்” என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *