ஏர்போர்ட்டில் ஆஸ்திரேலிய அதிகாரிகளைப் பதறவைத்த இந்திய மூதாட்டி!

மும்பையைச் சேர்ந்த வெங்கட லட்சுமி தன் மகளைப் பார்க்க ஆஸ்திரேலியா சென்றார். கடந்த புதன்கிழமை பிரிஸ்பேன் விமான நிலையம் சென்றடைந்தார். அங்கு லக்கேஜ் சோதனை செய்யும் இடத்தில் வரிசையில் நின்றுகொண்டிருந்தார். லட்சுமியின் அருகில் நின்றிருந்த பெண் லட்சுமியின் லக்கேஜை வித்தியாசமாகப் பார்த்தார். லட்சுமிக்கு ஒன்றும் விளங்கவில்லை.

சிறிது நேரத்தில் ஆஸ்திரேலியா ஃபெடரல் போலீஸார் லட்சுமியை நோக்கி வேகமாக வந்தனர். அவரின் லக்கேஜை கைப்பற்றினர். அந்த இடமே பரபரப்பானது. லட்சுமிக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. லட்சுமியின் லக்கேஜை சோதனைக்குட்படுத்தினர். அதில் சந்தேகம்படும்படி எந்தப் பொருள்களும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர், அந்த லக்கேஜ் குறித்து லட்சுமியிடம் விசாரித்தனர். `ஏன் இந்தப் பையில் Bomb to Brisbane என்று எழுதியிருக்கிறது’ என்று கேட்டனர். `அது Bomb கிடையாது; Bombay என்னும் வார்த்தையின் சுருக்கம்’ என்றார் அப்பாவித்தனமாக. இந்தப் பையில் Bomb என்று எழுதியிருந்ததால்தான் இவ்வளவு பெரிய குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. மன்னிக்கவும் என்று ஆஸ்திரேலியா போலீஸார் லட்சுமியிடம் மன்னிப்புக் கேட்டனர்.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் லட்சுமியின் மகள் தேவி ஜோதிராஜ் இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களிடம் பேசுகையில், ‘என் அம்மாவுக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது. முதல்முறையாகத் தனியாக விமானத்தில் பயணிக்கப் போகிறோம் என்ற பதற்றத்தில் இருந்திருப்பார். அதனால் லக்கேஜில் Bombay to Brisbane என்று எழுதுவதற்குப் பதில் சுருக்கமாக எழுதுவதாக எண்ணி Bomb to Brisbane என்று எழுதிவிட்டார். மேலும், அவர் காலத்தில் மும்பையைப் பம்பாய் என்றுதான் குறிப்பிடுவார்கள். காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடப்பதால் இங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக வயதான பெண்ணை இவ்வளவு அலைக்கழித்திருக்கக் கூடாது’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *