என்றும் வாழும் வாழ்வியல் கவிஞன் நா.முத்துக்குமார்!

கவிஞர்கள் மழையை கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில் ”மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு ” என வெயிலைக் கொண்டாடியவர். அம்மாவுக்கான வரிகளை கேட்டு திளைத்துகொண்டிருந்த நேரத்தில் ”ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு” என தந்தைக்கும் தாலாட்டு கொடுத்த பாடலாசிரியர். எளிய வார்த்தைகளால், உறவுகளுக்கு உயிர் கொடுத்து பாடலை கொண்டாடிய நா.முத்துக்குமாரின் 43-ஆவது பிறந்த நாள் இன்று.

நம்முடைய புன்னகையில், நம்முடைய கண்ணீர் துளியில்,  நம்முடைய கனத்த மெளனத்தில் என்றுமே நம்முடன் இசை இருக்கிறது – இது நா.முத்துக்குமார் உதிர்த்த வார்த்தைகள். அந்த இசைக்கு உயிர் கொடுத்து, இசையை வாழச் செய்தவர் முத்துக்குமார். நம் மனம் உணர்ந்திருக்கும் ஏதோ ஒரு உணர்வை வார்த்தைகளாய் கேட்கும் கணம் அந்த வார்த்தைகளோடு நம் மனம் ஒன்றிவிடுகிறதே, அந்த வார்த்தை பூக்களை ஒன்று சேர்த்து மாலை கோர்த்துவிடும் வித்தைக்காரன் தான் நா.முத்துகுமார். அந்தந்த கதாபாத்திரங்களை தன் பாடல் வரிகள் மூலம் நமக்குள் அவர் புகுத்திவிடுவார்.

 காதல் கொண்டேன் படத்தில் வினோத்தாக வரும் தனுஷ், தாழ்வு மனப்பான்மையின் துணையில் வளர்ந்த, வெளி மனிதர்களின் பழக்கம் கிட்டாத இளைஞனாக இருப்பார். கல்லூரி காலத்தில்  ஒரு நெருங்கிய தோழி கிடைப்பதும், அது வினோத்துக்கு காதலாவதும் கதை. வினோத்தின் மொத்த உணர்வுகளையும் ”தேவதையை கண்டேன், காதலில் விழுந்தேன்” பாடலில் கடத்தி இருப்பார்.

தோழியே ஒரு நேரத்தில் தோளிலே நீ சாய்கையில்
பாவியாய் என் மனம் பாழாய் போகும் போகும் என தான் செய்வது தவறா? சரியா? என தவிக்கும் அந்த இளைஞனின் மனநிலையை இதைவிட சிறப்பாக சொல்லிவிட முடியுமா என்ன?

தனக்குள் மெல்ல வரும் காதலை 7ஜி ரெயின்போ காலனி படத்தில் வரும் ”கனா காணும் காலங்கள்” பாடலில் உணர வைத்திருப்பார்.

இது கத்தியில் நடந்திடும் பருவம்
தினம் கனவினில் அவரவர் உருவம்
சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும், கடவுளின் ரகசியம் என காதலை சொல்லி இருப்பார்.

டார்லிங் படத்தில் ”அன்பே அன்பே” பாடலின் மூலம் ஒரு தலைக்காதலின் வலியை புரிய வைத்திருப்பார்.

யாரும் வந்து போகாத கோவில்
தீபம் போலே என்னை மாற்றும் காதல்
என்று முடியும் நான் தேடும் தேடல்
நீ இன்றி நான் ஏதடி? என்று வார்த்தைகளால் வலியை உணர வைத்திருப்பார்.

யாரடி நீ மோகினி படத்தில், பார்த்தவுடன் காதலில் விழும் இளைஞனுக்காக
ஆண்கள் வெக்கப்படும் தருணம்
உன்னை பார்த்த பின்பு நான் கண்டுகொண்டேன்
இடி விழுந்த வீட்டில் இன்று
பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி
கடவுள் பதில் கேக்கிறதே என்று எழுதி அசத்தி இருப்பார். அதேபோல் தீபாவளி படத்திற்காக ’’காதல் வைத்து’’ பாடல்.

தேவதை கதை கேட்ட போதெல்லாம் நிஜமென்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்புதான் நம்பி விட்டேன் மறுக்கவில்லை என்று எழுதி இருப்பார்.

இரு மனம் இணைந்து திளைக்கும் காதலாக கிரீடம் படத்தில் வரும் ”அக்கம் பக்கம்” பாடல் இருக்கும்.
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன் என்று நம்மையும் காதலில் மூழ்க வைக்கும் வரிகளை கொடுத்தவர் நா.முத்துக்குமார்.

திருமணத்திற்கு பிறகான காதலை பாபநாசம் படத்தில் வரும் ”ஏயா என் கோட்டிக்காரா” பாடலில் எழுதி இருப்பார்.
காச போல காதலும் செலவுக்கில்லாட்டி
கோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சம் இல்லாட்டி என்று மனம் உருக வைப்பார்.

காதலின் அனைத்து கோணங்களையும் தொட்ட அவர்,  மற்ற உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் அதே அழகியலை கொடுத்தார். தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே என்று தந்தையை தலைக்கு மேல் தூக்கியவர்.

கருவறை இல்லை என்ற போதும் சுமந்திடத் தோணுதே… ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு என அன்னை அன்பிற்கு ஓய்வு கொடுத்து தந்தையையும் தாலாட்டு பாட செய்தவர்.

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய்  என்று மகளின் அன்பை ரசிக்கும் தந்தைக்கு வார்த்தைகளை கொடுத்து அதற்கு தேசிய விருதையும் வென்றார்.

நதி நடந்து சென்றிட வழி துணை தான் தேவையா
கடல் அலை அது பேசிட மொழி இலக்கணம் தேவையா
இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு
கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்க்கை முழுதும் அழகு  என அன்பின் விழி வழி பார்த்தால் நாம் காண்பெதெல்லாம் அழகு என அழகுக்கு புது இலக்கணம் கொடுத்தார். அதற்காக அவருக்கு தேசிய விருதும் கொடுத்தது மத்திய அரசு.

காதல் உணர்வுகளை வார்த்தைகளாய் கொடுத்தவர், உறவின் வலிகளை உணர வைத்தவர், எளிய வார்த்தைகளால் ரசிக்க வைத்தவர், தமிழ் திரைப்படங்களுக்கு அழியா பாடல்களை கொடுத்தவர். திரைப்பட பாடல்கள் மட்டுமில்லை, கவிதை தொகுப்புகள், நாவல் என பல பரிமாணங்களில் வாழ்ந்தவர்.

சதையடைத்த உடலுக்கு தான் இழப்பும் இறப்பும். தமிழ் நிறைந்த கவிதைக்கு ஏது இறப்பு? நீங்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்குறீர்கள் முத்துக்குமார். உங்களுக்கு  பிறந்தநாள் வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *