உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் சாம்பியன் பட்டம் யாருக்கு? பிரான்ஸ்- குரோஷியா அணிகள் இன்று பலப்பரீட்சை

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது குரோஷியா அணி. 40 லட்சம் மக்கள் தொகையை மட்டுமே வசிக்கும் அந்த நாட்டின் அணி இறுதிச்சுற்றுக்கு வந்த பாதையை இந்த செய்தியில் காணலாம்.

உலக விளையாட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்துள்ள உலக கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் இன்று இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் வல்லரசு நாடுகளில் ஒன்றான பிரான்ஸ்சை குட்டி நாடான குரோஷியா அணி எதிர்கொள்கிறது.குரோஷியா அணி, இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருப்பது இதுவே முதல் முறை. இந்த அணி எப்படி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது என்ற கேள்வியே அனைவரது மனதிலும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. குரோஷிய நாட்டில் பள்ளிகளில் விளையாட்டு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பள்ளிகளிலும் கால்பந்து, கைப்பந்து மைதானங்கள் உண்டு. ஆனால் இந்த மைதானங்கள் பச்சைப் பசேல் புற்கள், ஒளி வெள்ளம் பாய்ச்சும் விளக்குகள் ஏதும் இல்லாமல்தான் தற்போது வரை உள்ளன. கால்பந்து பயிற்சிக்கென சிறப்பு மைதானம் ஒன்று கூட அங்கில்லை.

17 வயதுக்குட்பட்ட கால்பந்து வீரர்கள், ஜாக்ரெப் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் தான் தற்போதும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். உள்கட்டமைப்பு தேவையில்லை, தேசத்தின் மீது வெறி இருந்தாலே போதும் என்பதே குரேஷியர்களின் தாரக மந்திரம்.

இதனால் தான் வெறும் 40 லட்சம் பேரை கொண்ட அந்த குட்டி நாட்டின் அணி, உலகின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பார்க்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிச் சுற்றை எட்டிப்பிடித்துள்ளது. இன்றைய இறுதிப் போட்டியில், உலகக் கோப்பையை இந்த அணி வெல்லும் பட்சத்தில், குரோஷியாவின் பெயர் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும்.

இதே நேரத்தில் 135 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்திய நாட்டின் கால்பந்து அணி உலக கோப்பை தகுதி சுற்றிலேயே தகுதி இழந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *