உலகக் கோப்பையை வென்றதால் பிரான்சில் வெற்றிக் கொண்டாட்டம்

பிரான்ஸ் உலகக் கோப்பையை வென்றதை, அந்நாட்டு மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் அந்த அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உலகக் கோப்பையை பிரான்ஸ் அணி வென்றதும், அந்நாட்டில் கொண்டாட்டங்கள் களைகட்டின. வீதிகளில் திரண்ட லட்சக்கணக்கான மக்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவியும், கைகொடுத்தும் வாழ்த்துத் தெரிவித்தனர். எங்கு பார்த்தாலும் விண்ணைப் பிளக்கும் வாணவேடிக்கைகளுடன் ஆடிப்பாடி வெற்றியைக் கொண்டாடினர்.

உலகக் கோப்பையை தங்கள் அணி வென்றதையொட்டி பாரிஸ் நகரில் உள்ள ஈபிள் டவர் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அந்நாட்டின் முக்கிய நினைவுச் சின்னங்கள் நீலம்-வெள்ளை-சிவப்பு நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பாரிசில் திரண்டிருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் ரகளையில் ஈடுபட்டதால், போலீசார் அவர்களை விரட்டியடித்தனர்.

உலகக் கோப்பை போட்டியில் நம்பிக்கையுடன் இறுதிச் சுற்று வரை வந்த குரோஷியா, பிரான்ஸ் அணிக்கு எதிராகவும் அதே உத்வேகத்துடன் விளையாடியது. இதனை வெகுவாகப் பாராட்டிய குரோஷிய மக்கள் அந்த அணி தோல்வியடைந்ததால் வேதனை அடைந்தனர்.

இதனிடையே உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன. அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களும், பிரபலங்களும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

மனஉறுதியுடன் விளையாடிய பிரான்ஸ் அணியைப் பாராட்டுவதாகவும், வீரத்துடன் போராடிய குரோஷிய அணியை வாழ்த்துவதாகவும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் மற்றும் குரோஷிய அணிகளை வாழ்த்தியுள்ள பிரதமர் மோடி, சிறப்பாக போட்டியை நடத்திய ரஷ்யாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *