ஈரானில் சிக்கித் தவித்த 21 மீனவர்கள் மீட்பு… இரண்டே நாட்களில் நாடு திரும்புவார்கள் என சுஷ்மா ஸ்வராஜ் தகவல்

ஈரான் நாட்டில் தவித்து வந்த தமிழக மீனவர்கள் 21 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் 3-ம் தேதி முதல் குழுக்களாக சென்னை வந்து சேர்வார்கள் எனவும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 21 மீனவர்கள் ஈரான் நாட்டவருக்குச் சொந்தமான 3 விசைப்படகுகளில் கடந்த 6 மாதங்களாக ஈரானில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தனர் ஆனால், அவர்களுக்கு உரிய கூலியை முறையாக வழங்காமலும், போதுமான உணவு வழங்காமலும் படகு உரிமையாளர் ஏமாற்றியுள்ளார்.

இதனால், தங்க இடமின்றி, உணவு இன்றி மீனவர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இதுபற்றி தங்கள் உறவினர்களுக்கு தெரிவித்த மீனவர்கள், இந்திய தூதரகம் தலையிட்டு தங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கையும் வைத்தனர். இதையடுத்து அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், சுஷ்மா சுவராஜ் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ஈரானில் தனித்து விடப்பட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 21 இந்திய மீனவர்கள் இந்திய தூதரகத்தின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், அவர்களை 3-ம் தேதி தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *