இலங்கை அரசின் அடாவடி சட்டத்தின் கீழ் தமிழக மீனவர்கள் 27 பேர் சிறையிலடைப்பு! – ஏ.கே. கரீம் அறிக்கை

இராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை கிராமத்தைச் சேர்ந்த 27 மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்ததுடன், அவர்களின் நான்கு நாட்டுப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கடல் பரப்புக்கு சொந்தமான நெடுந்தீவு எல்லைப் பகுதியில் மீன்பிடித்த தமிழக மீனவர்களை அத்துமீறி எல்லைதாண்டி அவர்களை கைது செய்திருப்பது மட்டுமின்றி, இலங்கை அரசு கடந்த ஜனவரியில் திருத்தம் செய்து நிறைவேற்றியுள்ள புதிய கடல் தொழில் சட்டத்தின் கீழ் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்கள் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெறவும், பல லட்சம் ரூபாய் கட்டாய அபராதமும் செலுத்த வேண்டி வரும். இலங்கை அரசின் இந்த அடாவடித்தனம் கடும் கண்டனத்திற்குரியது.

முழுக்க முழுக்க தமிழக மீனவர்கள் மீது அபாண்ட அபராதம் விதிக்கவும், தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் இலங்கை அரசு திருத்தம் செய்து நிறைவேற்றியிருக்கும் கடல் தொழில் சட்டமானது மனிதநேயமற்ற அபாயகரமான சட்டம் என எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் எச்சரிக்கை தெரிவித்தன. இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளாமல் மத்தியில் ஆளும் பாஜக அரசு வேடிக்கை பார்ப்பதாக அப்போது குற்றச்சாட்டும் எழுந்தன. இந்நிலையில் அந்த குற்றச்சாட்டு தற்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் அலட்சியத்தால் அந்த கொடிய சட்டத்தின் கீழ் தமிழக மீனவர்கள் 27 பேர் அநியாயமாக சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை விரட்டி அடிப்பது, கைது செய்வது, அவர்களின் வலைகளை சேதபடுத்துவது என பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் நிலையில், தற்போது தமிழக மீனவர்களை குறிவைத்து கொண்டுவரப்பட்ட இலங்கை அரசின் புதிய சட்ட திருத்தம் மூலம் கைது செய்து சிறையில் அடைக்கும் அபாயமும் சூழ்ந்துள்ளது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களை அச்சமடையவைத்துள்ளது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தாமதமாகவேனும் உணர்ந்து, தமிழக மீனவர்களின் நலனை காக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கும் நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *