இணையதளம் மூலம் பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டம் ; வீடு தேடி எரிபொருள் வரும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்….

ஆன்லைன் மூலம் பெட்ரோல், டீசல் விற்பனை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

பெட்ரோலியப் பொருள்களின் விலையை தினசரி நிர்ணயிக்க பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனால், பெட்ரோல், டீசலின் விலை கடுமையாக உயர்ந்ததாகக் கூறி அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், அமெரிக்காவைத் தாக்கிய ஹார்வி மற்றும் இர்மா புயல்களால் பெட்ரோலியப் பொருள்கள் உற்பத்தி குறைந்ததன் விளைவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிச்சயமற்றதாய் இருக்கிறது என்றும் இதனால், பெட்ரோலிய பொருள்கள் விலை அதிகரித்தது என்றும் தெரிவித்தார். தற்போது, பெட்ரோல், டீசல் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது என்று கூறிய தர்மேந்திர பிரதான், தீபாவளிப் பண்டிகையை ஒட்டி விலை குறையும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் மாநாட்டைத் தொடங்கிவைத்துப் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தால் வீடு தேடி பெட்ரோல், டீசல் வழங்கும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் பல கூடுதல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பெட்ரோல், டீசலை ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும் என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *