அரசியலில் ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து காலம்தான் முடிவு செய்யவேண்டும் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

அரசியல் பிரவேசம் குறித்து வார இதழ் ஒன்றில் கமல்ஹாசன் எழுதி வருகிறார். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்களின் ஏழு நாட்கள் சம்பளம் பிடித்துள்ளது தமிழக அரசின் முதலாளித்துவத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்று கூறினார். போக்குவரத்து தொழிலாளர்கள் விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு திறமையுள்ள அதிகாரிகள் மற்றும் அறிஞர்களை நாட உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அரசியலில் தமக்கு எழும் சந்தேகங்களை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் கேட்டு தெரிந்து கொள்வதாக கமல் கூறியுள்ளார். ரஜினியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பது என்பது காலத்தின் கையில் உள்ளதாக தெரிவித்துள்ள அவர், இருவரின் கொள்கைகள் பொருத்தமாக உள்ளதா என்பதையும் பார்க்கவேண்டும் என்று வாரஇதழில் எழுதியுள்ள கட்டுரையில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இதனிடையே சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கமலுடன் இணைந்து அரசியலில் செயல்படுவது குறித்து காலம் தான் பதில் சொல்லும் என்று தான் ஏற்கனவே கூறி விட்டதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் சரியில்லாத சிஸ்டத்தை முதலில் சரி செய்ய வேண்டி உள்ளதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *