மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது இந்தியா

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது இந்தியா

கவுஹாத்தியில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் மேற்கிந்திய தீவுகள் அணி, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா அணியுடன் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி, அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள பரசாபரா கிரிக்கெட் மைதானத்தில்  நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களில், ஹெட்மேயர் மட்டும் 106 ரன்கள் அடித்தார். பிற வீரர்கள் சோபிக்கத் தவறினர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில், அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 322 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே ஷிகர் தவானின் விக்கெட்டை பறிகொடுத்தது. பின்னர் ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த விராட் கோஹ்லி மேற்கிந்திய அணியின் பந்து வீச்சை எளிதாக எதிர்கொண்டார். அதிரடியாக விளையாடிய விராட் கோஹ்லி 140 ரன்கள் அடித்து ஒரு நாள் போட்டிகளில் தனது 36 வது சதத்தை நிறைவு செய்தார்.

இறுதிவரை களத்தில் இருந்த ரோகித் சர்மா 152 ரன்கள் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். 42.1 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 326 ரன்களைக் குவித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், இந்தியா அபார வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *