இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலத் தொடக்கம், இந்தியா சார்பில் 68 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு

இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலத் தொடக்கம், இந்தியா சார்பில் 68 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு

அர்ஜென்டீனாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. இந்திய அணிக்கு துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர் தலைமை தாங்கிச் சென்றார்.

ஒலிம்பிக் போட்டிகளுக்கு இணையாக இளம் வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஊக்கம் தரும் வகையில் இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் 2010ல் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் மூன்றாவது போட்டி அர்ஜெண்டினாவில் நேற்று தொடங்கி, வருகிற 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 206 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 13 விளையாட்டுகளில் பதக்கங்களை வெல்ல 68 பேர் சென்றுள்ளனர்.

போட்டியின் தொடக்க விழா, விளையாட்டு மைதானத்தில் இல்லாமல் முதன்முறையாக சாலையில் நடைபெற்றது. ஒலிம்பிக் வளையங்களை அந்தரத்தில் தொங்கியபடி கலைஞர்கள் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

போட்டியின் தொடக்கமாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் பலர் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் கொடிகளை ஏந்திச் சென்றனர். இந்திய அணிக்கு, 16 வயது துப்பாக்கி சுடும் வீராங்கனை மனுபாக்கர் தலைமை தாங்கிச் சென்றார்.

இதனைத் தொடர்ந்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தாமஸ் பேட்ச் போட்டிகளை முறைப்படி தொடங்கி வைத்தார்.

அர்ஜென்டீனா நட்சத்திரங்கள் பாவ்லோ பரேட்டா, சான்டியாகோ லேஞ்ச் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தனர். இதையடுத்து வாணவேடிக்கைகள் அப்பகுதியில் களைகட்டியது.

போட்டியைக் காண 2 லட்சம் பேர் திரண்டிருந்தனர். தாய்லாந்தில் குகையில் சிக்கிய  கால்பந்து அணியின் சிறுவர்களும் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *