ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

சிட்னியில் நடைபெற்ற 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 61 ரன்கள் அடித்தார். சிட்னியில் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு164 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டார்ஸி ஷார்ட் 33 ரன்கள் அடித்தார். இந்திய அணியில் குருனால் பாண்டியா 36 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா, ஷிகர் தவான் இருவரும் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் மாறி மாறி பவுண்டரிகளும், சிக்ஸர்களும் விளாசினார். 5 ஓவரில் 62 ரன்கள் எடுத்து வலுவான தொடக்கத்தை அளித்தனர். 6-வது ஓவரில் 22 பந்துகளில் 41 ரன்கள் எடுத்த தவான், மிட்சல் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் ரோஹித் சர்மாவும், சாம்பா பந்துவீச்சில் போல்ட் ஆனார்.

பின்னர் கேப்டன் கோலி கே.எல்.ராகுல் ஜோடி நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். ராகுல் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் முதல் பந்தில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் கோலியுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். இறுதியில் 19.4 ஓவர்களில் இந்தியா வெற்றி இலக்கை எட்டியது. கேப்டன் விராட் கோலி 41 பந்துகளில் 61 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் உறுதி செய்தார்.

முன்னதாக பிரிஸ்பேனில் நடந்த முதல் போட்டியில், ஆஸ்திரேலியா டி/எல் விதிப்படி 4 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை வசப்படுத்தியது. இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும், மழை காரணமாக கடினமான இலக்கை துரத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது தோல்விக்கு காரணமாக அமைந்தது. அடுத்து மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த 2-வது டி20 போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. ஆஸ்திரேலியா 19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்த நிலையில், கனமழை பெய்ததால்  ஆட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் 1-0 என ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்க, சிட்னியில் இன்று நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *