முழு பயன்பாட்டிற்கு வந்தது, சென்னை மெட்ரோ ரயிலின் முதலாம் வழித்தடம், இன்று நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்ய அனுமதி

முழு பயன்பாட்டிற்கு வந்தது, சென்னை மெட்ரோ ரயிலின் முதலாம் வழித்தடம், இன்று நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்ய அனுமதி

சென்னை மெட்ரோ ரயில் முதல் வழித்தடத்தில் சேவை முழுமையாக தொடங்கியுள்ளதால், இன்று ஒருநாள் மெட்ரோ ரயிலில் இலவசமாகப் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப்போக்குவரத்தின் பயன்பாட்டை அதிகரிக்கவும், சாலைகளில் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டது மெட்ரோரயில் திட்டம். கடந்த 2009ஆம் ஆண்டு இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன. 42கிலோமீட்டர் தொலைவிலான முதல் வழித்தடத்திட்டத்தில் நீல நிற வழித்தடம் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலும், பச்சை நிற வழித்தடம் சென்டிரல் முதல் சென்ட் தாமஸ் மவுன் வரையிலும் என இரண்டு வழித்தடங்களில் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டது.

இதில் ஏற்கனவே பச்சைநிற வழித்தடத்தில் ரயில்சேவை முழுமையாக இயக்கப்பட்டு வந்த நிலையில், நீல நிற வழித்தில் சென்னை விமானநிலையம் முதல் டி.எம்.எஸ் வரையில் மட்டுமே இரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான 10கிலோமீட்டர் சுரங்கபாதை மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்ததையடுத்து, அதன் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். தினம்தோறும் அண்ணாசாலையில் வாகன நெரிசலில் சிக்கித்தவிக்கும் சென்னை வாசிகளிடம் முதல்கட்ட மெட்ரோ ரயில் வழித்தடம் வரவேற்பை பெற்றுள்ளது.

மெட்ரோ ரயில் முதல் வழித்தடத்தில் சேவை முழுமையாக துவங்கியுள்ளதையடுத்து கட்டணத்தையும் குறைத்து அறிவித்துள்ளது மெட்ரோ நிர்வாகம், வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலான நீலநிற வழித்தடத்திற்கு அதிபட்சம் 60ரூபாய், சென்டிரல் ரயில்நிலையம் முதல் கோயம்பேடு வழியாக ஆலந்தூர் வரையிலான பச்சை நிற வழித்தடத்திற்கு அதிகபட்சமாக 50ரூபாய் என டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் முதல் வழித்தடத்தில் சேவை முழுமையாக துவங்கியுள்ளதையடுத்து. பொதுமக்களை ஈர்க்கும் வகையில் இன்று இரவு வரையில் அனைத்து வழித்தடங்களிலும் பொதுமக்கள் இலவசமாக மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *