மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்யலாம் என்ற குற்றச்சாட்டு, காங்கிரசின் திட்டமிட்ட நாடகம் – ரவிசங்கர் பிரசாத்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்யலாம் என்ற குற்றச்சாட்டு, காங்கிரசின் திட்டமிட்ட நாடகம் – ரவிசங்கர் பிரசாத்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்து முறைகேட்டில் ஈடுபடலாம் என்ற குற்றச்சாட்டு, காங்கிரஸ் கட்சியால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட லண்டன் நாடகம் என மத்திய பாஜக அரசு தெரிவித்திருக்கிறது.

ஐரோப்பாவுக்கான இந்தியப் பத்திரிகையாளர் சங்கம், திங்கட்கிழமை, லண்டனில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில், அமெரிக்காவில் வசிக்கும், இந்திய சைபர் நிபுணரான சையத் சுஜா((Syed Shuja)), ஸ்கைப் மூலம், உரையாற்றினார். அப்போது, இந்தியாவில், தேர்தல் காலங்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில், முறைகேடு செய்ய முடியும் என சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். குறைவான அதிர்வெண் மூலம், வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள டிரான்ஸ்மீட்டர் சிப்புகளை ஹேக் செய்ய முடியும் என்றும், இதன்மூலம், எளிதாக முறைகேட்டில் ஈடுபட முடியும் என்றும் சையத் சுஜா கூறியிருக்கிறார்.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான, ECIL எனப்படும் எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்-ல், 10 ஆண்டுகள் பணிபுரிந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்ய முடியுமா? என்ற ஆய்வு 2013ல் நடைபெற்றதாகவும், தங்களது குழுவினர், ஹேக் செய்ய முடியும் என நிரூபித்ததாகவும் சையத் சுஜா கூறியிருக்கிறார். பாஜக மூத்த தலைவர் கோபிநாத் முன்டே, பத்திரிக்கையாளரல் கவுரி லங்கேஷ் ஆகியோரது மரணம் குறித்து ஐயம் எழுப்பியுள்ள சைபர் நிபுணர் சுஜா, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்ய முடியும் என நிரூபித்ததாலேயே, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு, அமெரிக்காவில் அரசியல் தஞ்சாமடைந்து, வசித்து வருவதாக, தெரிவித்திருக்கிறார்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஹேக் செய்து, முறைகேட்டில் ஈடுபட முடியும் என்ற சைபர் நிபுணர் சையத் சுஜாவின் குற்றச்சாட்டை, இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. BHELம், ECILம் இணைந்து, மிக கவனமான நடைமுறைகளுடன், கடுமையான பாதுகாப்பு அம்சங்களை கொண்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தயாரித்து வழங்குவதாக கூறியிருக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பாக, சைபர் நிபுணர் சையத் சுஜா முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள், மிகவும் மலிவான, முட்டாள்தானமானவை என, இந்திய தேர்தல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்த தவறான புரிதலை ஏற்படுத்த முனையும், சைபர் நிபுணர் சையத் சுஜா மீது, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது.

இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் சைபர் நிபுணர் சையத் சுஜாவின் லண்டன் நிகழ்வில் பங்கேற்க, இந்தியாவில் உள்ள தேர்தல் ஆணையர்கள் மற்றும், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. லண்டன் நிகழ்வில், காங்கிரஸ் எம்.பி கபில்சிபல் பங்கேற்றார். இவரது பங்கேற்பும் தற்போது, சர்ச்சையாகியிருக்கிறது.

சைபர் நிபுணர் சையத் சுஜாவின் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்துத் தெரிவித்து, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்திய ஜனநாயகத்தை சீர்க்குலைக்க, காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு ஒருங்கிணைத்த லண்டன் நாடகம் என விமர்சனம் செய்திருக்கிறார். லண்டன் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆஷிஷ் ராய், காங்கிரஸ் கட்சிக்கும், ராகுல் காந்திக்கும் மிகவும் வேண்டப்பட்டவர் என்றும், ரவிசங்கர் பிரசாத் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, லண்டன் நிகழ்ச்சியில் கபில்சிபல் பங்கேற்றது, அவரது தனிப்பட்ட பயணம் என்றும், கட்சிக்கு அவரது பங்கேற்பிற்கு சம்பந்தமில்லை என்றார். சைபர் நிபுணர் சையத் சுஜாவின் குற்றச்சாட்டுகள் அதிதீவிரமாக, தீர விசாரிக்கப்பட வேண்டியவை என்றும் அபிஷேக் சிங் தெரிவித்திருக்கிறார்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீது எழுப்பப்பட்டிருக்கும் சந்தேகத்தை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டியது இந்திய தேர்தல் ஆணையத்தின் கடமை என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வலியுறுத்தியிருக்கிறார். எனவே, இந்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை, வாக்குச்சீட்டுகளை பயன்படுத்தி நடத்த வேண்டும் என, தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்திருப்பதாகவும் மாயாவதி கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *